மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.60 F அல்லது 370 C ஆகும். முறையற்ற உணவு, சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் அடிப்படை மருத்துவக் கோளாறுகள் காரணமாக ஒருவரது உடல் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
தேவையான அளவு தண்ணீர் பருகாதது, நீரிழப்பு, ஏ.சி அறைகளில் நீண்ட நேரம் இருப்பது, மோசமான காற்றோட்டம்,சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது, காரமான உணவுகளை சாப்பிடுவது, வொர்க்அவுட்டிற்குப் பிறகு உடனடியாக குளிக்காமல் இருப்பது மற்றும் ஹைப்பர் தைராய்டிசம், மூட்டுவலி போன்ற கோளாறுகளால் பாதிக்கப்படுவதும் உடலின் தீவிர வெப்பத்திற்கு காரணமாகிறது.
1. குளிர்ச்சியான பானங்களை குடிக்கவும்:
தண்ணீர் அல்லது மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிக்கும் போது, அவை உடலை உட்புறமாக குளிர்விப்பதன் மூலம் உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. மேலும் தொடர்ந்து தண்ணீர் போன்ற திரவங்களை உட்கொள்வதால், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் நீரழிவைத் தடுக்கலாம்.
2. காற்று வெளியில் நடைபோடுங்கள்:
கடற்கரை, பூங்கா போன்ற குளிர்ச்சியான காற்று வீசக்கூடிய பகுதிகளில் சிறிது நேரம் நடப்பது அல்லது ஓய்வெடுப்பதன் மூலமாகவும் உடல் வெப்பநிலையை குறைக்க முடியும்.
3. குளியல்:
குளிர்ந்த நீரில் நீந்துவது, வெதுவெதுப்பான குளியல் ஆகியவை உடல் வெப்பநிலையைக் குறைக்கும். இந்த சந்தர்ப்பங்களில், நீரானது உடலில் படுவதன் விளைவாக உடல் வெப்பநிலை குறையும்.
4. பனிக்கட்டி:
மணிக்கட்டு, கழுத்து, மார்பு போன்ற நரம்புகள் மேற்பரப்புக்கு அருகில் இருக்கும் உடலின் முக்கிய புள்ளிகளில் குளிர்ந்த நீர் அல்லது பனிக்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது நரம்புகள் வழியாக ஓடும் இரத்தத்தின் வெப்பநிலையை விரைவாகக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக்கும்.
5. கடுமையான உடற்பயிற்சி வேண்டாம்:
வெப்பம் அதிகமுள்ள இடங்களில் கடுமையான உடற்பயிற்சி அல்லது தீவிரமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும், வெப்பநிலையை குறைக்க உதவும்.
6. இலகுவான ஆடைகள்:
எளிதில் சுவாசிக்கக்கூடிய காட்டன் போன்ற ஆடைகளை அணிவது உடல் வெப்பநிலையை தவிர்க்க உதவும். அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற செயற்கை துணிகளை விட பருத்தி மற்றும் கைத்தறி போன்ற இயற்கை துணிகள் உடலில் இருந்து வெப்பத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன.
7. கற்றாழை ஜெல்:
கற்றாழை செடியில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கையான ஜெல்லை சருமத்தின் மீது தடவுவது வெப்பத்தால் சேதமடைந்த தோல் செல்களை உடனடியாக அமைதிப்படுத்தும். குறிப்பாக கற்றாழையில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று உடல் சூட்டை தணிக்கும்.