How to Keep Children Safe from Dengue: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 600-யைக் கடந்துள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
எனவே டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய கொசுவிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?, குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்குறித்த விரிவான வழிமுறைகளைக் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவுக்கூடிய காய்ச்சலாகும். டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஎஸ் கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலமாக இது பரவுகிறது. பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தலாம் என்றாலும், சில தீவிரமான சந்தர்ப்பங்களில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஏடிஎஸ் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கக்கூடியவையாகும். சூரிய உதயத்திற்கு 2 மணி நேரத்திற்கு பிறகு மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு மட்டுமே இவை மனிதர்களைக் கடிக்கும் என்பதால், இந்த நேரங்களில் கொசுக்களால் கடிபடுவோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கான டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அறிகுறியுமின்றி 1-2 வாரங்களில் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக எரிச்சல், பசி மற்றும் தூக்க முறைகளில் மாற்றம் ஏற்படலாம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
மேலும் சில முக்கிய அறிகுறிகள் இதோ,
- திடீரென 40 டிகிரி செல்சியஸ் வரை அதிக காய்ச்சல் இருப்பது
- கடுமையான தலைவலி
- கண்களுக்குப் பின்னால் வலி
- தசை மற்றும் மூட்டுகளில் வலிகள்
- குமட்டல்
- வாந்தி
- சுரப்பிகளில் வீக்கம்
- தோலில் வெடிப்பு ஏற்படுதல்
டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவையா?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிறுநீரகம் மற்றும் நீரழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு அவசியமாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமடையும்போது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்பதை எடுத்துக்காட்டக்கூடிய சில அதிதீவிர அறிகுறிகளையும் யுனிசெப் தெரிவித்துள்ளது. அவை இதோ,
- கடுமையான வயிற்று வலி
- தொடர்ச்சியான வாந்தி
- வேகமாக சுவாசிப்பது
- ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தப்போக்கு
- சோர்வு
- வாந்தி அல்லது ரத்தம் கலந்து மலம் வெளியேறுதல்
- அதிக தாகம்
- உடல் குளிர்ச்சியடைவது
- தூக்கம், ஆற்றல் இல்லாமை
- தோல் எரிச்சல்
குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, கொசு கடியிலிருந்து தடுப்பதே சிறந்த வழியாகும். குறிப்பாகப் பகலில் குழந்தைகளைக் கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
- குழந்தையின் தொட்டில், ஸ்ட்ராலர் (stroller) மற்றும் விளையாட்டு அறை ஆகியவற்றை கொசுவலை அல்லது திரை கொண்டு முழுவதுமாக மூடி பராமரிக்கலாம்.
- குழந்தைகளின் வெளியே தெரியும் உடல் பாகங்களான கை மற்றும் கால்களை மூடியிருக்கும் வகையில், சாக்ஸ், கையுறை அல்லது முழுவதும் கவர் செய்யக்கூடிய ஆடைகளை அணிவிக்கலாம்.
- சுகாதார நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட வயதுக்கு ஏற்றக் கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். (3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு லெமன் யூகலிப்டஸ் (OLE) அல்லது பாரா-மெந்தேன்-டையால் (PMD) எண்ணெய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொசு விரட்டிகளை பயன்படுத்தக்கூடாது).
- ஏடிஎஸ் கொசுக்கள் சுறுசுறுப்பாக இயக்கக்கூடிய விடியற்காலை மற்றும் சூரிய அஸ்தமன வேளைகளில் குழந்தைகளில் வீட்டிற்கு வெளியே இருப்பதை தவிர்க்கலாம்.

கொசுக்கள் பெருக்கத்தை தடுக்கும் முறைகள்:
உங்களைச் சுற்றியுள்ள கொசுக்கள் பெருகும் இடங்களைக் குறைப்பதும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் கூட குழந்தைகளை டெங்கு காய்ச்சலிலிருந்து காப்பதற்கான முக்கிய வழிமுறைகளாகும்.
- வீடு, ஆபீஸ் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுவதோடு, நீர் தேங்கும் இடங்களை சீரமைக்க வேண்டும். உதாரணமாக பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
- தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் மற்றும் சாக்கடைகளை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.
- தண்ணீரைச் சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்களை கட்டாயம் காலியாகவோ அல்லது மூடி வைக்கவோ வேண்டும். (கொசுக்கள் முட்டையிடுவதைத் தடுக்க, சிறிய துளைகளைக் கொண்ட இறுக்கமான மூடிகள், திரைகள் அல்லது கம்பி வலையைப் பயன்படுத்தலாம்)
- அண்டை வீடுகளிலும் தண்ணீர் சேகரிக்கும் கொள்கலன்களை மூடிவைக்க வேண்டியதன் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.