$
Dengue Fever Symptoms, Causes, Treatment And Prevention: மழைக்காலம் என்றாலே நோய்த்தொற்றுக்களின் பரவலும் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இது எளிதில் நோய்த்தொற்றுக்களை அனுமதித்து பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிலும் இந்த காலகட்டத்தில் டெங்கு பரவலின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.
தற்போது கோடைக்காலமாக இருந்தாலும், மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர்த்தேக்கத்தில் கொசுக்கள் பரவு டெங்கு காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லாததால், நோயைப் பரப்பும் கொசுக்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். டெங்கு பரவலின் அறிகுறிகள், காரணங்கள், தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை, தலைமை மருத்துவ நிபுணர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Dengue Symptoms: பரவி வரும் டெங்கு., இந்த அறிகுறிகளை புறணக்கணிக்காதீர்கள்!
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் (Dengue Fever Causes)
- டெங்கு வைரஸ் ஆனது பல கொசு வகைகளை உள்ளடக்கிய ஏடிஸ் இனத்தில் உள்ள கொசுக்களால் பரவக்கூடியதாகும்.
- இது ஏடிஸ் வகை பெண் கொசுக்களால் பரவுகிறது. குறிப்பாக, ஏடிஸ் எஜிப்டி வகையால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
- இந்த வைரஸ் கொசு உடலில் நுழைந்து உடலில் உள்ள மற்ற திசுக்களுக்கு பரவுகிறது. இதனால் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
- இது தவிர, கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு காய்ச்சல் பரவுதல், இரத்தப் பொருள்கள், உறுப்பு தானம் மற்றும் இரத்த மாற்றம் போன்றவற்றின் மூலம் டெங்கு பரவுதல் நிகழலாம்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் (Dengue Fever Symptoms)
டெங்கு காய்ச்சல் Bone Breaking Fever என்றும் அழைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் குறித்து டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பகிர்ந்துள்ளார்.
- அதிகளவிலான காய்ச்சல்
- உடல் வலி
- வாந்தி, குமட்டல் உணர்வு
- கடுமையான தலைவலி
- கடுமையான மூட்டு மற்றும் தசைவலி
- உடல் சோர்வு
இது தவிர, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது. அதன் படி, இரத்தத்தில் உள்ள அணுக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் எனப்படும் தட்டையணுக்கள் காணப்படுகின்றன.
இதில் டெங்கு பாதிப்பால், பிளேட்லெட்டுகள் அதிகளவு பாதிக்கப்படுகிறது. இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் உடலில் ஆங்காங்கே இரத்தக்கசிவு ஏற்படலாம். இந்த இரத்தக்கசிவு உயிருக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிதமானது முதல் தீவிரமானது வரை இருக்கலாம். தீவிர டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரலில் சளி பிடித்தல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் வயிற்றில் நீர் சேர்த்துக் கொள்வதால் வயிறு வீக்கத்தை உண்டாக்கலாம். கால்களிலும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dengue Effect Platelets: டெங்கு பாதிப்பால் பிளேட்லெட் எண்ணிக்கை குறையுமா? நிபுணர் கூறும் விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் (Dengue Fever Treatment)
டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்ந்து 14 நாள்கள் வரை இருக்கலாம். இதற்கான முக்கிய சிகிச்சை முறையாக, குறைவான இரத்த அணுக்களை சமநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாகும். டெங்குவால் குறைக்கப்பட்ட அணுக்களை இரத்தத்தின் மூலம் பிளேட்லெட் அணுக்களை உடலுக்குள் கொண்டு செலுத்த வேண்டும்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட உறுப்புகளைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிக காய்ச்சல் இருப்பின், காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்துகளை டெங்கு நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவை அனைத்தும் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் சிகிச்சை முறைகளாகும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் (Dengue Fever Prevention)
- டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முக்கிய படியாக, டெங்குவைப் பரப்பும் கொசுக்களைத் தவிர்க்க வேண்டும்.
- குறிப்பாக கொசுக்கள் பகல் நேரங்களில் பரவக்கூடியதாக காணப்படும். எனவே நீர்த்தேக்கம் உள்ள இடங்களை சுத்தம் செய்து கொசு பரவுதலைத் தவிர்க்க வேண்டும்.
- உதாரணமாக, வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் நீர் தேங்கியிருக்கும். இந்த நீர் தேக்கத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.
- மேலும் ஆங்காங்கே காணப்படும் டயர்களில் நீர்த்தேக்கம் இருக்கலாம்.
- இவ்வாறு வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நீர்த்தேக்கத்தைக் குறைத்து கொசு உற்பத்தியையும், கொசு பரவுதலையும் கட்டுப்படுத்தலாம்.
- முழு ஆடைகளை அணிவதன் மூலம், கொசு கடிப்பதைத் தவிர்க்கலாம்.
இது போன்ற பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு பரவுதலைக் கட்டுப்படுத்தலாம். டெங்கு காய்ச்சல் தடுக்கக்கூடிய ஒன்று தான். எனவே, காய்ச்சல், வாந்தி, குமட்டல், உடல் வலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் இருப்பின் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவதன் மூலம் டெங்குவின் தீவிர பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dengue Fever: மழைக்காலத்தில் டெங்குவில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
Image Source: Freepik