
நம்மில் பலருக்கும் ஏற்படும் பொதுவான சருமப் பிரச்னையாக அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் ஏற்படும் கருமை நிறம் கருதப்படுகிறது. இது வெறும் அழகியல் பிரச்னை மட்டுமல்ல, சில நேரங்களில் உடல் ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறியாகவும் அமைகிறது. மருத்துவர் கார்த்திகேயன் இந்த பிரச்னையின் காரணங்களையும், அதை சரிசெய்வதற்கான சிறந்த வழிகளையும் விளக்கியுள்ளார்.
Video Link: https://youtu.be/0n75C7BuXtw
ஏன் இந்த கருமை ஏற்படுகிறது? முக்கிய காரணங்கள்
மெலனின் அதிக உற்பத்தி
தோலின் நிறத்திற்குக் காரணமான மெலனின் நிறமி சில பகுதிகளில் அதிகமாகச் சுரக்கும்போது அந்த இடம் கருமையாக மாறும்.
உராய்வு மற்றும் வியர்வை
நடப்பது, இறுக்கமான ஆடைகள் அணிவது, வியர்வை அதிகரிப்பது போன்றவை தொடை மற்றும் அக்குள் பகுதிகளில் உராய்வை ஏற்படுத்தி கருமைக்கு வழிவகுக்கின்றன.
உடல் எடை மற்றும் ஹார்மோன் காரணிகள்
எடை அதிகமாக இருந்தால் உராய்வு அதிகரிக்கும். மேலும், இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance), PCOD, கர்ப்பகாலம் போன்றவை ஹார்மோன் மாற்றங்களால் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
அக்கந்தோசிஸ் நைகிரிகன்ஸ் (Acanthosis Nigricans)
இது முக்கியமான மருத்துவ அறிகுறி. கழுத்து, அக்குள், தொடை இடுக்குப் பகுதிகளில் தோல் தடிமனாகி, வெல்வெட் துணி போல கருமையாக மாறும். இது பெரும்பாலும் சர்க்கரை நோய் அல்லது அதன் ஆரம்பகட்ட அறிகுறி ஆகும். எனவே, இவ்வாறான கருமை தென்பட்டால் உடனடியாக சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும் என மருத்துவர் எச்சரிக்கிறார்.
கருமையை நீக்க எளிய வீட்டு வைத்திய முறைகள்
தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை: தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்; எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை குறைக்கும். இரண்டையும் கலந்து தடவி 10–15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
சர்க்கரை ஸ்க்ரப்: சர்க்கரை, தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை கலந்து, கருமையான இடங்களில் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும். இது இறந்த செல்களை நீக்கி தோலை பளபளப்பாக்கும்.
உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கில் உள்ள Catecholase எனும் இயற்கை என்சைம் கருமையை குறைக்க உதவும். உருளைக்கிழங்கை நறுக்கி அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் 15 நிமிடங்கள் வைத்துப் பிறகு கழுவலாம்.
கற்றாழை (Aloe Vera): கற்றாழை ஜெல் தோலின் அழற்சியைக் குறைத்து, இயற்கையான வெண்மைத் தோற்றத்தை அளிக்க உதவுகிறது.
மருத்துவ ரீதியான சிகிச்சைகள்
வீட்டு வைத்திய முறைகள் பலன் அளிக்கவில்லை என்றால், சரும மருத்துவரின் ஆலோசனையில் பின்வரும் சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.
ஆயின்மென்ட் (Ointments): நியாசினமைடு (Niacinamide) போன்ற வைட்டமின்கள் உள்ள ஆயின்மென்ட் கருமையை குறைக்கும். ஆனால் கோஜிக் அமிலம் (Kojic Acid) சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்தவும்.
ரெட்டினாய்டு ஆயின்மென்ட்: வைட்டமின் ஏ நிறைந்த இந்த ஆயின்மென்ட் தோல் புதுப்பிக்க உதவும். பலன் தெரிய 2–3 மாதங்கள் வரை ஆகலாம்.
லேசர் சிகிச்சை: கருமையை உடனடியாக குறைக்கும் ஒருவகை சிகிச்சை. ஆனால் இதற்கும் மீளுதல் காலம் தேவைப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: தொடை கருமையை நீக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் விளக்கம் இங்கே..
வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கியம்
* உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்.
* தளர்வான பருத்தி ஆடைகள் அணியுங்கள்.
* இன்சுலின் எதிர்ப்பு, PCOD போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனைப் பெறுங்கள்.
* தினசரி நன்றாக தண்ணீர் குடிக்கவும், உடற்பயிற்சி செய்யவும்.
இறுதியாக..
அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் ஏற்படும் கருமை ஒரு சாதாரண அழகியல் பிரச்சனையாகத் தோன்றினாலும், அது உடல் உள் மாற்றங்களின் பிரதிபலிப்பு ஆக இருக்கலாம். காரணத்தை அறிந்து, வாழ்க்கை முறையிலும் உணவுமுறையிலும் மாற்றம் செய்தால், இந்த பிரச்சனை முழுமையாகக் குறையலாம். மருத்துவர் கார்த்திகேயன் கூறியவாறு, “வெளியில் தடவுவது மட்டும் போதாது; உடலுக்குள் நடக்கும் காரணத்தையும் சரிசெய்ய வேண்டும்” என்பதே முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவர் கார்த்திகேயனின் பொதுவான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் கூறப்பட்டுள்ள மருத்துவ தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சிகிச்சையையோ வீட்டு வைத்தியத்தையோ பின்பற்றுவதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 15, 2025 12:39 IST
Published By : Ishvarya Gurumurthy