$
How To Cure Cold And Strength Our Lungs: இந்த பருவகால மாற்றங்களால் மக்கள் பலரும் தங்களது அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இதில் ஒன்றாகவே மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் அமைகிறது. அதிலும் இன்று 30 மற்றும் 40 வயதைக் கடந்த உடனேயே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இது உருவாவதற்கு முக்கிய காரணம் நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் அதிகரிக்க, நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாவதாகும்.
அதிலும் குறிப்பாக, மழைக்காலம் என்றாலே நமக்கு எளிதில் சளி, இருமல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு நாம் மருத்துவர்களை நாடி மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வதில்லை. இதற்கு சிறந்த தீர்வாக, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே நம் வீட்டிலேயே சில எளிய சில வைத்திய முறைகளைக் கையாளலாம். இவை சளி, இருமல் பிரச்சனைகளிலிருந்து குணமாக்கி, அவை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Karpooravalli Leaf For Cold: சளி, இருமல் பிரச்சனைக்கு கற்பூரவள்ளி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க
சளி எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
பொதுவான சளியானது அனைவருக்கும் இருக்கக்கூடிய மற்றும் எளிதில் பரவக்கூடிய ஒன்றாக அமைகிறது. இவை பெரும்பாலும் வீட்டிலேயே குணப்படுத்த முடியும். இது பெரும் பிரச்சனையாக மாறும் போது மருத்துவர்களை நாடி மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். மேலும், சளி காரணமாக மூக்கு முதல் தொண்டை வரை பாதிப்பு ஏற்பட்டு அசௌகரியத்தைத் தருகிறது.
சளி ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக அமைவது வைரஸ்களே ஆகும். வைரஸின் காரணமாக சாதாரண சளி முதல் கொரோனா வரை பாதிப்பு ஏற்படலாம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதிலும் மிகவும் சிறிய குழந்தைகள் அடிக்கடி சளித்தொற்றால் பாதிப்படைகின்றனர். இது குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 10 நாள்கள் வரை நீடிக்கலாம். குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு சளி நீண்ட நாள்கள் வரை இருக்கும்.

சளி ஏற்படுவதற்கான அறிகுறிகள்
- இருமல்
- தும்மல்
- மூக்கு ஒழுகுதல்
- தொண்டை கரகரப்பு
- உடல் வலி மற்றும் லேசான தலைவலி
- சில நேரங்களில் குறைந்தளவு காய்ச்சல்
இந்த அறிகுறிகள் அனைத்துமே சளியின் காரணமாக ஏற்படுகிறது. எனினும், அதிகளவு காய்ச்சல் (101.3 டிகிரிக்கு அதிகமானால்), மூச்சுத்திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், அதிக தலைவலி, சைனஸ் பிரச்சனை போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிலும் குழந்தைகளுக்கு 100.4 டிகிரிக்கு மேல் காய்ச்சல் தாண்டி விட்டால், தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படுவது போன்றவை இருப்பின் குழந்தைகளை மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற வீட்டு வைத்தியம்!
நுரையீரலைப் பலப்படுத்த உதவும் கஷாயம்
தேவையானவை
- வெற்றிலை – 1
- கிராம்பு – 5
- மிளகு – 10
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு
- பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்

கஷாயம் தயார் செய்யும் முறை
- சளி நீங்க மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும் கஷாயம் தயார் செய்வதற்கு முதலில் வெற்றிலை, மிளகு, கிராம்பு, இஞ்சி போன்ற பொருள்கள் அனைத்தையும் இடித்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, பாத்திரம் ஒன்றில் 200 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து, அதில் இடித்த பொருள்களைச் சேர்த்து பின் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்கலாம். இவ்வாறு கொதிக்கும் போது அதன் சாறுகள் அனைத்தும் தண்ணீரில் இறங்கும்.
- பின், இதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.
- இந்த கக்ஷாயத்தை வாரம் ஒருமுறை பருகி வந்தால், நுரையீரல் வலிமை பெறுவதுடன் சுவாச உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். மேலும், இதன் மூலம் சளி, இருமல், தும்மல் போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அனைஹ்தும் நீங்கி விடும்.
இது போன்ற ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், இந்த கஷாயத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மேலும் ஏதேனும் புதிய பொருள்கள் அல்லது பானங்களை உட்கொள்ளும் முன்னதாக மருத்துவர் அல்லது நிபுணர்களிடம் கலந்தாலோசித்து பிறகு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Cough Home Remedies: நெஞ்சு சளியை கரைக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
Image Source: Freepik