$
Is it good to eat olive oil Everyday: உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உணவுமுறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தில் நாம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் எண்ணெய் என பலவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் முக்கியமாக நாம் தேர்ந்தெடுக்கப்படும் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.
அவ்வாறே ஊட்டச்சத்து மிக்க மிகவும் சத்தான எண்ணெய்களில் ஒன்றாக அமைவது ஆலிவ் எண்ணெய் ஆகும். இதில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உணவிற்கு சுவையை அதிகரிப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதாக அமைகிறது. நம் அன்றாட உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil Side Effects: சமையலுக்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் பயன்படுத்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!
ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்த
தினசரி உணவில் ஆலிவ் எண்ணெயை சேர்த்துக்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில், ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபினால்கள் குடல் மூலம் நேரடியாக உறிஞ்சப்படும் என்பதைக் குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை பராமரிப்பதில் பங்களிக்கிறது. இது நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

எடை அதிகரிப்பதைத் தவிர்க்க
இதில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், இதை அளவோடு உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் முழுமை உணர்வைத் தருவதுடன், பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான எடை பராமரிப்பை எளிதாக்குகிறது. ஆய்வு ஒன்றில், சோயாபீன் எண்ணெயைப் பயன்படுத்தியவர்களைக் காட்டிலும், ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் அதிகம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
ஆலிவ் எண்ணெய் மெடிட்டேரியன் டயட் உணவுமுறையில் முதன்மையான கொழுப்பு மூலமாகக் கருதப்படுகிறது. மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், இது நீண்ட ஆயுட்காலம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்தில் பங்களிக்கும் காரணிகளாகும். அதன் படி நாள்தோறும் 20 கிராம் அல்லது இரண்டு தேக்கரண்டி ஆர்கனிக் ஆலிவ் எண்ணெய் உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பாமாயில் vs தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய் - சமையலுக்கு எது பெஸ்ட்?
டைப் 2 நீரிழிவு அபாயத்தைத் தவிர்க்க
ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். இதற்கு இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளே காரணமாகும். இவை இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இவை இரண்டுமே நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முக்கியமான காரணிகளாக அமைகிறது. ஆய்வு ஒன்றில், ஆலிவ் எண்ணெய் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் பிளாஸ்மா குளுக்கோஸ் உண்ணாவிரதத்தைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் ஆலிவ் எண்ணெயை உட்கொள்ளலாம்.

எலும்பு பிரச்சனைகளுக்கு
ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடக்கு வாதம் மற்றும் பிற எலும்பு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை பாக்கும். எனவே ஆலிவ் எண்ணெயை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கலாம்.
மனக்கவலை நீங்க
ஆலிவ் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனை உட்கொள்வது கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், இந்த எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை ஆதரிக்கின்றன. இவை மனக்கவலை மற்றும் பதட்டம் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
இவ்வாறு அன்றாட உணவில் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil: சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
Image Source: Freepik