குழந்தைகள் எப்போதும் சிறப்பானவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நல்லபடியாக வளர்க்க சிறப்பான பெற்றோர் தான் அமைவதில்லை என ஒரு கூற்று உண்டு. நம் தமிழ்க்கவிஞர் எழுதி வைத்த பிரபலமான பாடல் வரிகளும் அதற்கு உதாரணம். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே…” கொஞ்ச வேண்டிய இடத்தில் கொஞ்சி, கண்டிக்க வேண்டிய வேண்டிய இடத்தில் கண்டிக்கப்படும் குழந்தைகள் வீட்டிற்கு மட்டுமல்ல, இச்சமூகத்திற்குத் தேவையான நல்ல குழந்தையாகவும் வளர்கின்றனர். குழந்தை வளர்ப்பு எளிமையானதா என்று கேட்டாலும், கடுமையானதா என்று கேட்டாலும் இரண்டிற்கும் ஒரே பதில்தான் – ஆம்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மகிழ்ச்சிகரமானதுடன், பெரும் பொறுப்பும் கொண்ட ஒரு செயலாகும். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவியல் மற்றும் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டிய செயல்களில் இது முக்கியமானதாகும். முதல் ஐந்து ஆண்டுகள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான சரியான சூழலை வடிவமைப்பதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளின் கற்றல், மாற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் உளவியல் ரீதியாக தன்மைகளை வளர்ப்பதற்கு அவை உதவி செய்யும்.
குழந்தை வளர்ப்பின் முக்கிய அம்சங்களாக கீழ்கண்டவற்றைப் பட்டியலிடலாம்.
முக்கிய கட்டுரைகள்
அன்பும் கவனமும்:
குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பும், ஆதரவும் முக்கியமானவை. குழந்தைகளுக்குத் தேவையான அன்பையும், பாதுகாப்பையும் பெற்றோர்களைத் தவிர வேறு யாராலும் முழுமையாகத் தர முடியாது. கண்டிப்பான பெற்றோர் கனிவான பெற்றோர் என யாராக இருந்தாலும் குழந்தைகள் உங்களை நம்புவது அன்பின் வழியாகவும் கவனக் குவிப்பின் வழியாகவும்தான்.
பெற்றோரின் நேரடி அன்பிலும், கவனிப்பிலும் நாம் இருக்கிறோம் என்பதே குழந்தைகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தரும். நண்பரையொத்த பகிர்வுகள் நடைபெறும். எது ஒன்றையும் மனதாரச் செய்யும் போதும் அது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். குழந்தைகளின் உணர்வுகளை வெளிக்கொணர அனுமதிக்க வேண்டும்.
ஒழுக்கம் மற்றும் சுயமுடிவுகள்:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது என்கிறது திருக்குறள். எனவே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பட்டியலில் முதலாவதாக இருப்பது ஒழுக்கம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஒழுக்கமாக வளர்க்கப்படும் குழந்தைகளாலேயே சிறந்த குடும்பமும் சிறந்த நாடும் கட்டமைக்கப்படும். வளர்ந்த பிறகு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொள்ளலாம் என்பது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்.
அதேபோல குழந்தைகளை சில சுயமுடிவுகளை எடுக்க அனுமதியுங்கள். அது அவர்களது சிந்தனைத் திறனை மேம்படுத்துவதுடன் ஆளுமைத்திறனையும் வளர்க்க உதவி செய்யும். “உனக்கு ஒண்ணும் தெரியாது. உன்னால முடியாது” போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவிருங்கள். சுயமுடிவுகள் மூலமாக அவர்கள் பாடங்கள் கற்றுக் கொள்வார்கள். அதன்மூலமாக சமூகத்தில் நல்லதொரு உயரிய நிலையை அடையவும் அது அவர்களுக்கு உதவி செய்யும்.
கல்வி மற்றும் அறிவு:
படிக்காத மேதைகள் சிலர் உண்டு. படித்த மேதைகள் லட்சக்கணக்கில் உண்டு. குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவது மிக முக்கியம். அதன் வாயிலாக அவர்கள் புதிய உலகை கண்டடைகிறார்கள். ஒரு அழகிய உயர்ந்த கட்டிடம் வலிமையாக நிற்க வேண்டுமானால் அதன் அடிப்பகுதி வலிமையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியும் அத்தகையது தான். வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்பதைத் தாண்டி வாழ்வியல் கல்வியையும் அவர்களது வாழ்வில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கணிதங்களையும், அறிவியலையும் புத்தகங்களில் மட்டுமல்லாது அன்றாட நடைமுறையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களைத் தாண்டிய புத்தக வாசிப்பு, கற்பனை திறன் வளர்ப்பு, புதிய விஷயங்களை அறிதல் ஆகியவை அவர்களுடைய அறிவுத் திறனை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றும்.
உடல்நலம் மற்றும் உணவு:
சரியான உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை. இன்றைக்குப் பல குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே விரும்பி உண்கின்றனர். இதனால் உடல்பருமன், பற்சொத்தை, வயிறுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்களும் குறிப்பிட்ட சில உணவுகளைச் சொல்லி அதை மட்டும்தான் எங்கள் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். இதில் பெருமைப்பட ஏதுமில்லை.
துரிதவகை உணவுகளால் அப்போதைய சுவையைத் தவிர வேறெந்த நன்மையும் விளையப் போவதில்லை. உங்கள் குழந்தைகளின் உடல்நலன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நிச்சயம் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். நல்ல உணவோடு நல்ல உடல்நலத்தையும் அளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. தன்னம்பிக்கை மற்றும் உடல் உறுதியைப் பெருக்கும் விதமாக சிறு சிறு வீட்டு வேலைகளையும் உடற்பயிற்சியையும் செய்ய குழந்தைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.
சமூகம்:
இச்சமூகத்தில் தான் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். பல்வேறு குடும்பங்கள் இணைந்து ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பல்வேறு செயல்பாடுகள் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தெருக்களில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
சமூக மாற்றங்களையும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உரையாடல் நிகழ்த்தி அதற்கான தீர்வுகளைச் சொல்ல அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மத நல்லிணக்கங்களைப் பேணவும், சமூக மேம்பாடு குறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பிறருடன் உறவாடும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். நல்ல நடத்தை மற்றும் மரியாதையை கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கான நல்ல சமூகவாழ்க்கையை உருவாக்கும்.
பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு:
குழந்தைகளுடன் இணைந்து விளையாடும் சூழலை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். வெற்றி தோல்விகளை சமமாகக் கையாளும் திறன் அங்கிருந்து தான் வளர்கிறது. இப்போதைய பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் பூஞ்சையாக இருக்கின்றனர். சிறு தோல்வியைக் கூட அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் துவண்டு விடுகின்றனர்.
அவர்களது நண்பர்களுடன் விளையாடும் போது என்னமாதிரியான விளையாட்டுகளை என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது பெற்றோருக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். விளையாட்டு என்பது குழந்தைகளின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. சரிவிகித உணவு என்பதைப் போல சரிவிகித படிப்பும், விளையாட்டும் அவர்களை மேம்படுத்தும் காரணிகளாக அமையும்.
பாதுகாப்பு:
நாம் குழந்தைகளாக இருந்த போது இருந்த காலகட்டத்தை விட இப்போதைய காலம் குழந்தைகளுக்கான அதிக பாதுகாப்பைக் கோருகிறது. உள்ளுணர்வு வாயிலாக தனிநபர்களை எப்படிக் கண்டறிவது என்பதைக் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது பெற்றோர்களின் கடமை. இவ்வுலகத்தில் நல்லவர்களைப் போலவே கெட்டவர்களும் நம் அருகிலேதான் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து விலகவேண்டும்.
அவர்களால் ஆபத்து எனும் போது உரக்க வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆழமாகக் கற்றுத் தர வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப் லைன் இரண்டிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இன்றைய நவீன காலப் பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
குழந்தை வளர்ப்பு என்பது மகிழ்ச்சி தரும் ஒரு பயணம். பெற்றோர் அதை மனப்பூர்வமாகச் செய்து, குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதே மிகச் சிறந்த பொறுப்பான செயலாகும். பெற்றோர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.