AC Side Effects: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது. வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயில் தாக்கம் இருப்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை அதிகமாக இருக்கும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ACயால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்
வெப்ப தாக்கத்தை தாங்க முடியாத மக்கள் எங்கு சென்றாலும் ஏசி உதவியை நாடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு வீடு என்பது முழுமையடைவதற்கே டிவி, பேன், லைட் என்பது போல் ஃப்ரிட்ஜ், ஏசி போன்றவையும் அத்தியாவசியமாக மாறியுள்ளது.
வீடு, அலுவலகம் என இரண்டிலும் ஏராளமானோர் ஏசியை பயன்படுத்துகின்றனர். 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 10-15 மணிநேரம் வரை ஏசியில் தான் பலர் வாழுகின்றனர். வெயிலின் தாக்கத்தில் சோர்வடையும் நாம் ஏசியில் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்றாலும் இதன் செயற்கை காற்று மற்றும் குளிர்விக்கும் தன்மை இரண்டுமே உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
அதிக நேரம் ஏசியில் இருப்பது உடலுக்கு நல்லதா?
அதேபோல் அதிக ஏசி பயன்பாடு என்பது சரும பிரச்சனை, செரிமான பிரச்சனை, கண்கள் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதோடு Dry Eye Syndrome எனப்படும் கண் வறட்சி பிரச்சனையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. கண்கள் இயல்பாக செயல்பட போதிய அளவு கண்ணீர் மிக அவசியம். உலர்ந்த காற்று கண்களில் வறட்சி பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஏசியில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை குறித்து பார்க்கையில், ஏசியாக சரியாக சுத்தம் செய்து பராமரிக்கவில்லை என்றால் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று வியாதிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல் ஏசியில் தொற்று வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருக்கும் போது அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவும். எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை போன்ற பிரச்சனை இருந்தால் அது மற்றவருக்கும் எளிதாக தொற்றிக் கொள்ளும்.
ஏசியை ஆரோக்கியமாக பயன்படுத்த வழிகள்
ஏசி அறையில் அதிக நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
ஏசியை 23 டிகிரிக்கு மேல் இருக்கும்படி வைத்து பயன்படுத்தவும்.
அதேபோல் ஏசி காற்று நேரடியாக முகத்தில் படாதபடி இருப்பது நல்லது.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது நல்லது. போதுமான அளவு தண்ணீரை அடிக்கடி குடிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
கண்களுக்கு ஓய்வு மிக முக்கியம். இதற்கு நீங்கள் போதுமான நேரம் தூங்க வேண்டும். தூக்கம் பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
அதேபோல் ஏசியில் புதிதாக இருக்கும் போது தீவிர அறிகுறிகள் ஏதும் தென்படும் பட்சத்தில் உடனே மருத்துவர் உதவியை அணுகுவது நல்லது.
Image Source: FreePik