குழந்தைக்கு ஆறு மாத வயதிற்கு பிறகு இணை உணவு (Complementary Feeding) ஆரம்பிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் இந்திய குழந்தை நல சங்கம் (Indian Academy of Pediatrics – IAP) வலியுறுத்துகின்றன. ஆனால், இந்தக் கட்டத்தில் பெற்றோர்கள் சில தவறுகளைச் செய்வதால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, குழந்தை நல மருத்துவர் மற்றும் உணவுமுறை ஆலோசகர் டாக்டர் அருண்குமார் கூறுகிறார். WHO வழிகாட்டுதலோடு டாக்டர் அருண்குமார் பகிர்ந்த தகவல்கள் இங்கே.
குழந்தைக்கு இணை உணவு கொடுக்கும்போது பெற்றோர்கள் செய்யும் தவறுகள்..
1. பழச் சாறு கொடுப்பது
பல பெற்றோர்கள், குழந்தைகளுக்கு பழச் சாறு (Fruit Juice) கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என நம்புகிறார்கள். ஆனால் பழங்களை சாறு எடுத்து கொடுப்பது நல்லதல்ல என WHO கூறுகிறது. சக்கையுடன் முழுப் பழம் மசித்துத் கொடுத்தாலே குழந்தைக்கு உண்மையான நன்மை கிடைக்கும் என டாக்டர் விளக்குகிறார்.
2. அசைவ உணவுகளை தாமதப்படுத்துவது
சில பெற்றோர்கள், குழந்தைக்கு 2 அல்லது 3 வயதுக்குப் பிறகே அசைவ உணவுகளை (மீட், முட்டை, மீன்) கொடுக்கத் தொடங்குகின்றனர். இது தவறு. புரதச்சத்து மிகுந்த அசைவ உணவுகளை 6–7 மாதம் முதல் அளவோடு கொடுக்க வேண்டும். முட்டையை தினசரி உணவில் சேர்ப்பது குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என WHO வலியுறுத்துவதாக மருத்துவர் அருண் கூறினார்.
3. நட்ஸ் & சீட்ஸ் தவிர்ப்பு
“நட்ஸ் கொடுத்தால் அலர்ஜி வரும்” என்ற பயத்தால் சில பெற்றோர்கள் ஆரம்பத்தில் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால் உண்மையில், அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்தினால், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். குறிப்பாக சைவ உணவுகளைப் பின்பற்றும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு நட்ஸ், தானியங்கள், விதைகள் ஆகியவற்றை தினசரி கொடுக்க வேண்டும் என WHO பரிந்துரைப்பதாக மருத்துவர் கூறினார்.
இந்த பதிவும் உதவலாம்: ADHD உள்ள குழந்தைகளுக்கு.. இந்த உணவுகளை கொடுக்கவும்.. நிபுணர் பரிந்துரை..
4. சர்க்கரை மற்றும் உப்பு தவறான புரிதல்
பலர் ஒரு வயது வரை குழந்தைக்கு சர்க்கரை, உப்பு கொடுக்கவே கூடாது என நினைக்கிறார்கள். ஆனால் WHO மற்றும் IAP கூற்றுப்படி, அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை மட்டுமே தீங்கு விளைவிக்கும். சிறிய அளவு உப்பு கூழ் அல்லது பருப்பு சாதத்தில் சேர்த்தால் பிரச்சனை இல்லை என்று டாக்டர் அருண் கூறுகிறார்.
5. ஒரே மாதிரியான உணவுகள் கொடுப்பது
“குழந்தைக்கு ஒரே மாதிரி உணவை அடிக்கடி கொடுக்காமல், பலவிதமான உணவுகளை மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்” என டாக்டர் கூறுகிறார். தாய்ப்பால், பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ், காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், அசைவம் உள்ளிட்டவை அனைத்தும் சேர்ந்து சத்தான டயட் அளிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 5 வகை உணவுகள் குழந்தையின் உணவில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
View this post on Instagram
இறுதியாக..
குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்கும் போது, பெற்றோர்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட அவர்களின் ஆரோக்கிய வளர்ச்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். WHO மற்றும் IAP பரிந்துரைத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பழம், காய்கறி, தானியம், அசைவம், நட்ஸ் ஆகியவற்றை சமச்சீராக அளவில் கொடுத்தால், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி சிறப்பாக அமையும். மேலும், சத்தான உணவு பழக்கங்களை ஆரம்பத்திலிருந்தே உருவாக்கிக் கொடுத்தால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து, குழந்தை ஆரோக்கியமாக வளரும்.