கர்ப்ப காலம் (Pregnancy) என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் சவாலான காலம். இந்த நேரத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில பெண்கள் காலை வாந்தி, உணவு விருப்ப மாற்றம், சோர்வு போன்றவற்றை அனுபவிக்க, சிலருக்கு சருமம் மற்றும் முடி தொடர்பான சிக்கல்கள் தோன்றுகின்றன. அதில் ஒன்று உச்சந்தலையில் அரிப்பு (Itchy Scalp During Pregnancy). இது பல பெண்களுக்கு கவலை அளிக்கும் பிரச்சனையாகும்.
ஆனால், மருத்துவர் டாக்டர் என். சப்னா லுல்லா கூறுவதுப்படி, இது பெரிய பிரச்சனையல்ல. பல காரணங்களால் தலையில் அரிப்பு ஏற்படலாம், அதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
கர்ப்ப காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்
ஹார்மோன் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சருமத்தின் இயற்கை ஈரப்பத சமநிலை பாதிக்கப்படுகிறது. தலையின் தோல் அதிக உணர்திறன் (sensitivity) பெறுகிறது. இதன் விளைவாக அரிப்பு, பொடுகு மற்றும் தோலழற்சி ஏற்படுகிறது. மேலும், மன அழுத்தத்தால் (Stress) கார்டிசோல் (Cortisol) அளவு கூடுவதும் அரிப்பை தீவிரமாக்கும்.
உடல் எண்ணெய் சமநிலையின்மை
கர்ப்ப காலத்தில் உடலின் எண்ணெய் உற்பத்தி மாறுபடுகிறது. சில சமயம் தலையின் தோல் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது. சில சமயம் அதிக எண்ணெய் சுரப்புகள் (Sebum) வெளிவந்து தலை பசைபோல் ஆகி, அழுக்கு தேங்குவதால் அரிப்பு ஏற்படுகிறது.
உச்சந்தலையில் தொற்று
கர்ப்ப காலத்தில் பொடுகு அல்லது பூஞ்சை தொற்று (Fungal Infection) அதிகம் காணப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் அதிக எண்ணெய் உற்பத்தி காரணமாக வியர்வை + அழுக்கு சேர்ந்து தொற்றை உருவாக்கும். இதனால் தலையில் அரிப்பு அதிகரிக்கிறது.
இரத்த ஓட்டம் அதிகரிப்பு
கர்ப்பிணிப் பெண்களில் இரத்த உற்பத்தி (Blood Production) அதிகரிக்கிறது. இந்த கூடுதல் இரத்த ஓட்டம் (Increased Blood Flow) சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரவில் தூங்கும் முன் அதிக அரிப்பு உணரப்படலாம்.
முடி தயாரிப்புகளுக்கான எதிர்வினை
கர்ப்ப காலத்தில் சருமம் மிகுந்த உணர்திறன் பெறுவதால், முன்பு பிரச்சனையில்லாமல் பயன்படுத்திய ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய் ஆகியவை கூட தற்போது எரிச்சலை ஏற்படுத்தலாம். கடுமையான இரசாயனங்கள் உள்ள தயாரிப்புகள் அரிப்பை தீவிரமாக்கும்.
எப்படி கட்டுப்படுத்தலாம்?
* மென்மையான (Mild) ஷாம்பு பயன்படுத்தவும்.
* தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
* இரசாயனமுள்ள தயாரிப்புகளைத் தவிர்க்கவும்.
* போதுமான தண்ணீர் குடிக்கவும், ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளவும்.
* இயற்கை எண்ணெய்களை (Coconut oil) குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
தலையில் அரிப்பு சாதாரணமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஆனால், அரிப்பு மிகவும் கடுமையாக இருந்தால், தலையில் சொறி (Rashes) தோன்றினால், அரிப்பு உடலின் பிற பகுதிகளுக்கும் பரவினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் இது கல்லீரல் அல்லது ஹார்மோன் சம்பந்தப்பட்ட சிக்கல்களின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
இறுதியாக..
கர்ப்ப காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு மிகவும் பொதுவானது. பெரும்பாலான நேரங்களில், இது ஹார்மோன் மாற்றங்கள், சரும வறட்சி அல்லது எண்ணெய் சமநிலையின்மை காரணமாக ஏற்படுகிறது. எளிய வீட்டுவழி முறைகள் மற்றும் சீரான பராமரிப்பு மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம். ஆனால், அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.