$
நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வருவது நல்ல அதிர்ஷ்டம் என நம்பிக்கைகள் பலருக்கும் உண்டு. ஆனால் இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வருவது என்பது உண்மையில் சுகாதாரப் பிரச்சனையை குறிப்பதாக கூறப்படுகிறது. மருத்துவத்தின் படி, நகங்களில் வெள்ளை புள்ளிகள் வருவது லுகோனிசியா என அழைக்கப்படுகிறது. டாக்டர் துஷார் தயல் (இன்டர்னல் மெடிசின், சிகே பிர்லா மருத்துவமனை, குருகிராம்) நம்மிடம் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.
லுகோனிசியா என்றால் என்ன?
"நகங்கள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நச்சுகளின் வெளிப்பாடு காரணமாக, அவை வெள்ளை திட்டுகள் அதாவது லுகோனிசியா எனப்படும் கோடுகளை உருவாக்குகிறது" என்று டாக்டர் தயல் கூறினார். இது புள்ளிகளாகவோ அல்லது நீளமான கோடுகளோகவோ நகங்கள் மீது தோன்றலாம்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, லுகோனிச்சியா அல்லது வெள்ளை நகங்கள் பொதுவாக ஒரு ஆபத்தான அறிகுறி அல்ல எனவும் ஆனால் இது சில நேரங்களில் கடுமையான அமைப்பு கோளாறுகளின் அறிகுறிகளை குறிக்கலாம் எனவும் கூறுகிறது.
காரணங்கள்
லுகோனிச்சியா என்பது நகங்களில் உள்ள வெள்ளைப் புள்ளிகள் அல்லது நிறமாற்றத்தின் நிலையைக் குறிக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

நகம் கடித்தல்: அடிக்கடி நகம் கடிப்பது அல்லது நகங்களை முறையற்ற முறையில் அகற்றுவதனால் ஏற்படும் சுகாதாரக் கோளாறால் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும்.
வெள்ளை புள்ளிகள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறிக்கின்றன என்பது தவறான கருத்து என்றாலும், துத்தநாகம், இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சில வைட்டமின்களின் குறைபாடுகளால் வெள்ளை புள்ளிகள் ஏற்படலாம். டிரைக்காலஜி இன்டர்நேஷனல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், துத்தநாகக் குறைபாடு நகங்களின் வளர்ச்சியின் விகிதத்தைக் குறைக்கிறது மற்றும் நகங்கள் உடையக்கூடியதாகவும் மாற்றுகிறது.
பூஞ்சை தொற்று: ஓனிகோமைகோசிஸ் போன்ற நகங்களின் பூஞ்சை தொற்று நிறமாற்றம் மற்றும் வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும். இந்த புள்ளிகள் நகங்களின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உடையக் கூடியதாக மாற்றுகிறது.

ஒவ்வாமை காரணங்கள்: சில இரசாயனங்கள் அல்லது பொருட்களுக்கான ஒவ்வாமை நகங்களில் வெள்ளை புள்ளிகளாக வெளிப்படும். உதாரணமாக, நெயில் பாலிஷ் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவரால் ஏற்படும் காண்டாக்ட் டெர்மடிடிஸ் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
அமைப்பு சார்ந்த நோய்கள்: அரிதான சந்தர்ப்பங்களில், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற சில அமைப்பு ரீதியான நிலைமைகளும் வெள்ளை புள்ளிகள் அல்லது நகங்களின் தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்
டாக்டர் தயலின் கூற்றுப்படி, புள்ளிகள் தொடர்ந்து அல்லது மோசமடைவதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

லுகோனிச்சியாவின் பெரும்பாலான நிகழ்வுகள் பாதிப்பில்லாதவை தான், நகங்கள் வளரும்போது அவை தானாகவே தீர்க்கப்படுகின்றன. இருப்பினும், உங்கள் நகங்களின் தோற்றத்தைப் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தாலோ நிறமாற்றம் போன்ற வேறு ஏதேனும் அறிகுறிகளை அனுபவித்தாலோ ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது சிறந்த முடிவாகும்.
image souce: freepik