$
Natural Mosquito Repellent For Skin: ஆண்டுதோறும், ஆகஸ்ட் 20 ஆம் நாள் அன்று, உலக கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது முதன் முதலில் 1897 ஆம் ஆண்டில் பெண் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்கு பரப்புகிறது என்பதை கண்டறிந்ததன் வாயிலாக அனுசரிக்கப்பட்டது. இதனை சர் ரொனால்ட் ரோஸ் என்பவர் கண்டறிந்தார். அதன் படி, மலேரியா நோயிலிருந்து மக்களைத் தடுக்கும் வகையிலேயே, மலேரியா நோய்க்கான காரணத்தைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்கு இந்த தினம் உருவாக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, இன்றும் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இன்றளவும் கொசுக்களால் பரவும் நோய்கள் இன்னும் பரவி வருவதுடன், சிகிச்சையளிப்பது கடினமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பலர் மரணமடைகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆண்டுதோறும் மலேரியாவால் சுமார் 4,00,000 இறப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மலேரியாவைத் தவிர, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் கொசுக்களால் பரவக்கூடியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Cold Remedies: இந்த 6 பொருள்கள் போதும்! சளியை உங்க கிட்ட கூட நெருங்க விடாது
கொசுக்களால் நோய் பரவுதல்
இன்றைய மாறிவரும் நவீன காலகட்டத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பெரும்பாலானோர்க்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைகிறது. இதனால், பலரும் நோய்த்தொற்றுக்களால் எளிதில் தாக்கப்படும் நிலையில் உள்ளனர். குறிப்பாக, மழைக்காலத்தில் நோய்த்தொற்றுக்களின் அபாயம் அதிகமாகவே உள்ளது. இந்த காலகட்டத்தில் கொசுக்களால் பரவும் நோய்கள் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே கொசுக்கடியைத் தவிர்க்க நாம் பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கு வீட்டிலேயே கொசு சுருள்களைப் பயன்படுத்துவர். ஆனால், கொசு சுருள்களைப் பயன்படுத்துவது பல வகையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கையான கொசு விரட்டி
கொசு சுருள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம். இவை இயற்கையாக இருப்பதால், இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இதில் சில இயற்கையான கொசு விரட்டிகளைக் காணலாம்.
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய்
இந்த எண்ணெய் இயற்கையான முறையில் கொசுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம். 10 மில்லி எலுமிச்சை எண்ணெயுடன், 90 மில்லி அளவிலான கேரியர் எண்ணெயைச் (ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்) சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலைக் குலுக்கி தேவையான இடத்தில் தடவலாம்.
வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெய் இயற்கையாக நிகழக்கூடிய ஒரு பூச்சிக்கொல்லியாகக் கருதப்படுகிறது. இது நோய் பரவாமல் தடுக்கவும் உதவுகிறது. அதிலும் கொசுக்களை விரட்டுவதில் வேப்பெண்ணெய் மிதமான மற்றும் மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதை இயற்கையான கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க
இலவங்கப்பட்டை எண்ணெய்
இது கொசுக்கள் மற்றும் உண்ணிகளை விரட்டக்கூடிய சிறந்த எண்ணெயாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெய் கொண்ட ஆர்கானிக் லோஷனைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். இந்த கலவையானது உண்ணிகளை விரட்டுவதில் வெற்றிகரமாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மிளகுக்கீரை எண்ணெய்
உண்மையில் மிளகுக்கீரை எண்ணெய் வயிற்று வலி மற்றும் தலைவலியை நீக்குவது முதல் தசை புண்களை ஆற்றுவது வரை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்திய பிறகு 3 மணி நேரம் வேலை செய்யும் எனவும் கூறப்படுகிறது. எனவே மிளகுக்கீரை எண்ணெயை இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.

சிட்ரோனெல்லா எண்ணெய்
இயற்கையான கொசு விரட்டிகளில் ஒன்றாக சிட்ரோனெல்லா எண்ணெயும் அமைகிறது. இது சிட்ரோனெல்லா மெழுகுவர்த்திகள் மற்றும் வாசனை திரவியங்களாக இருக்கலாம். இதில் சிட்ரோனெல்லா எண்ணெயைப் பயன்படுத்துவது அடிப்படையிலான உடல் கிரீமாக செயல்பட்டு கொசுக்களை விரட்டுகிறது. இதனுடன் லெமன்கிராஸ் மற்றும் கிராம்பு எண்ணெய் போன்ற கிரீம் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சிட்ரோனெல்லா மட்டும் சிறந்த தேர்வாக இருக்காது. ஏனெனில், இது விரைவாக ஆவியாகி கொசுக்கடிக்கு உள்ளாகலாம்.
கிராம்பு எண்ணெய்
மசாலா பொருளான கிராம்புவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதுடன், கொசுக்களை விரட்டவும் உதவுகிறது. எனினும் கிராம்பு எண்ணெயைத் தனியே பயன்படுத்துவது விரைவாக ஆவியாகி விடக்கூடும் என்றும், இதனை வெண்ணிலின் என்ற வேதிப்பொருளுடன் இணைப்பது ஆவியாதலைத் தடுக்க உதவும் எனவும் ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது.
இத்தகைய இயற்கையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதுடன், கொசு சுருள் போன்றவற்றைத் தவிர்த்து பல்வேறு அபாயங்களிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொசுபத்திலாம் வேணாம்! வீட்டிலேயே தயார் செய்த இந்த கொசு விரட்டிகளை யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik