கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய நீரழிவு நோய் கர்ப்ப கால நீரழிவு நோய் என அழைக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாகும்.
சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயர் இரத்த சர்க்கரை அளவு தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும். சில சந்தர்ப்பங்களில், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும், சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும் கர்ப்பகால நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இது தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கவும், சுகப்பிரசவத்திற்கும் உதவும்.

ஏற்கனவே டைப்1 மற்றும் டைப்2 சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்கும் போது வேறு மாதிரியான சவால்கள் இருக்கலாம். கர்ப்பகால நீரிழிவு நோய் ஆபத்து அல்ல. ஆனால் அதை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது தான் தாய் சேய் இருவருக்கும் ஆபத்தை உண்டு செய்யும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்பகால நீரிழிவு பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பக்கூடும். ஆனால் அது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் கர்ப்பகால நீரிழிவு நோயை பாதிக்கப்பட்டால், பிற்காலத்தில் டைப் 2 நீரழிவு நோய் வரவும் வாய்ப்புள்ளது.
கர்ப்பகால நீரிழிவு எவ்வாறு உருவாகிறது?
நீங்கள் சாப்பிடும்போது, கணையத்தில் உள்ள சிறப்பு செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றன. இது உணவை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் இருந்து உடலில் உள்ள செல்களுக்கு அனுப்புகிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நஞ்சுக்கொடி இரத்தத்தில் குளுக்கோஸைக் அதிகரிக்கும் ஹார்மோன்களை சுரக்கிறது. கணையம் இன்சுலினை வெளியிடுகிறது மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால் உங்கள் உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகள் யாவை?
கர்ப்பகால நீரிழிவு எந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஏற்படலாம். இருப்பினும்,சில குறிப்பிட்ட காரணிகளும் காரணமாக உள்ளன.
- பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்
- உடல் செயல்பாடு இல்லாமை
- உடல் பருமன்
- குடும்பத்தில் பெற்றோர், முன்னோர்களுக்கு நீரழிவு நோய் இருப்பது
- உயர் இரத்த அழுத்தம்
- குழந்தையின் எடை 4 கிலோவிற்கு மேல் இருப்பது
கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் என்ன சிக்கல்கள் ஏற்படலாம்?
கட்டுப்பாடில்லாமல் அல்லது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கர்ப்பகால நீரிழிவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- ப்ரீக்ளாம்ப்சியா:
தீவிர கர்ப்ப சிக்கல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்பு அமைப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தும்.
- அறுவை சிகிச்சை:
கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- எதிர்காலத்தில் நீரிழிவு நோய்:
கர்ப்ப காலத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கும், எதிர்காலத்தில் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தையை பாதிக்கும் பிரச்சனைகள்:

- பிரசவம்:
சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கர்ப்பகால நீரிழிவு உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அல்லது கருச்சிதைவிற்கோ வழிவகுக்கக்கூடும்.
- குறைப்பிரசவம்:
கர்ப்ப கால நீரழிவு நோயை கண்டுகொள்ளாமல் விட்டால், அது குறை பிரசவத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
- சுவாசிப்பதில் சிரமம்:
கர்ப்ப கால நீரழிவு நோயால் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு சுவாசப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
- இரத்தச் சர்க்கரைக் குறைவு:
சில குழந்தைகள் பிறந்த உடனேயே இரத்தச் சர்க்கரைக் குறைவை அனுபவிக்கலாம் தனால் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும்.