ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு வேப்ப மரம் வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இது ஆன்மீக ரீதியிலான மரம் மட்டும் கிடையாது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் விளங்குவதால் தான் வீட்டுக்கு ஒரு வேப்ப மரத்தை நமது முன்னோர்கள் நட்டுவைத்தனர். குறிப்பாக அம்மை நோய்க்கு வேப்ப இலையை மருத்தாக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. அம்மை நோய் வந்தவர்களுக்கு வேப்பிலையால் வருடி விட்டால் மென்மையாக இருக்கும், அரிப்பு நீங்கும். வேப்பிலை கண்கண்ட அருமருந்து என்கின்றனர். கோடை காலத்தில் வெயிலின் கொடுமையால் உடல் சூடாகி பித்தம் அதிகரிக்கும், அப்படிப்பட்ட சமயத்தில் கோடை மழையால் திடீர் குளிர்ச்சி காரணமாக கிருமிகளின் தொற்று ஏற்படும் போது அம்மை நோய் ஏற்படுகிறது.
சின்னம்மையின் அறிகுறிகள் என்னென்ன?
சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். உடலில் சிறிய, சிவப்பு புள்ளிகளுடன் ஷிங்கிள்ஸின் முக்கிய அறிகுறிகள் தொடங்குகின்றன. இவை படிப்படியாக நீர் கொப்புளங்களாக மாறும். இந்தக் கொப்புளங்கள் மிகவும் அரிக்கும். லேசானது முதல் மிதமான காய்ச்சல் இருக்கலாம். உடல் பலவீனமாகவும் சோம்பலாகவும் உணரலாம். சிலருக்கு தலைவலியும் இருக்கலாம், சாப்பிடவே பிடிக்காமல் போகலாம்.
சொறிக்கு மருந்து:
அம்மை நோய் வந்தவர்களை பருத்தி துணி மீது வேப்பிலையை பரப்பி விட்டு, படுக்க வைப்பார்கள் .அது ஏன் என யோசித்திருக்கிறீர்களா?. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு ஏற்படும். ஆனால் உடல் முழுவதும் கொப்புளங்கள், புண்கள் இருப்பதால் நகத்தால் சொறியும் போது தீவிர காயம் ஏற்படும். மேலும் அது ஆறாத வடுவாகக்கூட மாறக்கூடும். இதனால் தான் வேப்பிலை மீது படுக்க வைக்கிறார்கள். வேப்பிலையின் மென்மையான முனைகளால் வருடி விடுவது அரிப்பை கட்டுப்படுத்த உதவும்.
வேப்பிலை தண்ணீர் குளியல்:
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூரிய வெப்பத்தில் தண்ணீர் வைத்து அதில் வேப்பிலையைப் போட்டு குளிக்க வைப்பார்கள். ஆன்மீக ரீதியாக வேப்பிலையை மாரியம்மன் மிகவும் விரும்புவதாகவும், அதனை பயன்படுத்தி குளிக்கும் போது உடலில் குளிர்ச்சி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், வேப்பை இலைகள் இயற்கையாகவே குளிர்ச்சியானவை, இது உடல் சூட்டத்தை தணித்து, வீக்கங்களையும் கொப்புளங்களையும் சரி செய்ய உதவுகிறது.
அதனால் தான் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பிலையை அரைத்து கொப்புளம் உள்ள இடங்களில் பூசுகிறார்கள். வேப்ப இலைகள் கிருமி நாசினிகள் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துவதாகவும், நோய் பரவுவதைத் தடுப்பதாகவும் நம்பப்படுகிறது.
தோல் அரிப்பை குறைக்கும்:
வேப்ப இலைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சின்னம்மை என்பது சின்னம்மை வைரஸால் ஏற்படுகிறது. வேப்ப இலைகள் சுற்றுச்சூழலில் வைரஸ்கள் பரவுவதை ஓரளவு குறைக்கும். வேப்பிலைகள் அரிப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. கொப்பளங்களால் ஏற்படும் அரிப்பைக் குறைக்க, வேப்ப இலைகளை தண்ணீரில் கலந்து குளிப்பதோ அல்லது அவற்றை நேரடியாக தோலில் தடவுவதோ நிவாரணம் அளிக்கும்.
வேப்ப இலைகளின் கிருமி நாசினிகள் பண்புகள் தோலில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. கொப்புளங்கள் வெடிக்கும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. வேப்பிலைகள் காற்றை சுத்திகரித்து, ஓரளவுக்கு குளிர்ச்சியாக வைத்திருக்கும். இது நோயாளிக்கு வசதியாக இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது?
- நோயாளி தூங்கும் படுக்கையில் வேப்பிலைகளைப் பரப்ப அதன் மீது படுக்க வைக்கலாம்.
- வேப்ப இலைகள் ஊறவைத்த தண்ணீரில் குளிக்க வைக்கலாம்.
- வீட்டின் வாசலில் வேப்பிலைகளைக் கட்டுவார்கள். ஏனெனில் இதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு வீட்டிற்குள் கிருமிகளை அண்டவிடாது என நம்பப்படுகிறது.
- கொப்புளங்கள் மீது வீக்கத்தை குறைப்பதற்கான ஆயுர்வேத மருந்தாகவும் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.