அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்னைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு. அதுவும் வெயில் காலத்தில் பருக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. பருக்களை போக்குவது முதல் பல்வேறு சரும பிரச்சனைகளை விரட்டியடிக்க வேப்பிலையை என்னென்ன வழிகளில் பயன்படுத்தலாம் என பாருங்கள்...
கொழுந்து வேப்பிலை :
வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும். வெள்ளைப்பூண்டு வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்த பின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.
வேப்பிலை எண்ணெய் :
பரு அடிக்கடி வருமாயின், 1 டீஸ்பூன் வேப்பிலை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், 1 வார காலத்தில் பிம்பிள் முழுமையாக மறைவதைக் காணலாம்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் :
வேப்பிலையை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பிம்பிள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அக்கலவையில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, பிம்பிளை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும்.
வேப்பிலை பேஸ்ட் :
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, வாரம் ஒருமுறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்புத்தன்மையினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
வேப்பிலை மற்றும் பட்டை :
2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் பட்டைத் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, அவற்றில் உள்ள சிகிச்சைப் பண்புகளால், சருமத்துளைகள் சுத்தப்படுத்தப்பட்டு, இனிமேல் பரு வருவது தடுக்கப்படும்.
வேப்பிலை சாறு :
வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தைக் கழுவி வர, வேப்பிலையில் உள்ள தன்மைகள், சருமத்தை சுத்தமாகவும், பிம்பிள் இன்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் இம்முறையால் சருமம் கருமையடைவதும் தடுக்கப்படும்.
வேப்பிலைப் பொடி மற்றும் பால் :
வேப்பிலை பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையை மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு 2 நாட்களுக்கு முன் செய்தால், மாதவிடாய் காலத்தில் வரும் பருவை தடுக்கலாம்.
வேப்பிலை சோப்பு :
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ சோம்பேறித்தனப்படுபவர்கள், வேப்பிலை சோப்பைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த சோப்பைக் கொண்டு தினமும் 2 முறை முகத்தைக் கழுவ, முகத்தில் உள்ள பரு நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.