இன்றைய காலத்தில் பலருக்கும் வலிப்பு (Seizure) பிரச்சனை ஏற்படுகிறது. சிலர் அதை மந்திரம் அல்லது மூடநம்பிக்கை என்று நினைத்து தவறான முறையில் சமாளிக்கிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக பார்த்தால், வலிப்பு என்பது மூளையின் திடீர் மின்சார சீர்கேடு காரணமாக ஏற்படும் ஒரு நிலை. இதைச் சந்திக்கும் போது, நம்மால் செய்யப்படும் சில தவறான செயல்கள் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் டாக்டர் முபாரக் (Radiologist).
வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவை
பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்
ஒருவர் சாலையில் வலிப்பால் தரையில் விழுந்தால், உடனே வாகனங்கள் செல்லாத இடத்திற்கு மாற்றுங்கள். அருகில் கூர்மையான பொருட்கள், கண்ணாடிகள், கத்தி போன்றவை இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
தலையை பாதுகாக்கவும்
அவர்களிடம் இருந்தால் ஷால், சட்டை அல்லது ஜாக்கெட் சுருட்டி தலையின் கீழ் வையுங்கள். இது தலைக்காயம் ஏற்படாமல் தடுக்கும்.
சைடு பாசிஷனில் (Lateral position) வைத்திருங்கள்
நோயாளியை பக்கவாட்டில் படுக்க வைத்து, வாய் வழியாக சுரக்கும் துவர்ப்பை வெளியேற வழி செய்யுங்கள். இல்லையெனில் அது மூச்சுக்குழாயில் சென்று நுரையீரல் தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
அமைதியாக இருங்கள்
நோயாளி கைகள், கால்கள் அசைந்தாலும், வாய் வழியாக நுரை வந்தாலும் அச்சப்படாமல் அமைதியாக இருங்கள்.
மருத்துவ உதவி பெறுங்கள்
வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்.
வலிப்பு வந்தால் செய்யக்கூடாதவை
* கீ கொடுக்க வேண்டாம் – சிலர் கையில் சாவியை வைத்தால் வலிப்பு குறையும் என்று நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறு.
* அவர்களை அழுத்திப் பிடிக்க வேண்டாம் – கைகள், கால்களை வலுக்கட்டாயமாக பிடிப்பது எலும்பு முறிவு ஏற்படுத்தும்.
* வாய் உள்ளே கை விட வேண்டாம் – நாக்கை கடித்து விடுவார் என்ற பயத்தில் கை வைப்பது, நம் கையையும் காயப்படுத்தும்.
* வாய் உள்ளே பொருள் வைக்க வேண்டாம் – கரண்டி, குச்சி, சாவி போன்ற பொருட்களை வைப்பது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.
* உணவு அல்லது தண்ணீர் கொடுக்க வேண்டாம் – வலிப்பு நடக்கும் போது தண்ணீர் கொடுத்தால் நுரையீரல் சிக்கல் உண்டாகும்.
View this post on Instagram
மருத்துவரின் கருத்து
வலிப்பு என்பது பயப்பட வேண்டிய நோய் அல்ல, ஆனால் சரியான முறையில் கையாள வேண்டும். தவறான நம்பிக்கைகளை விட்டுவிட்டு, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது தான் சிறந்த தீர்வு என்கிறார் டாக்டர் முபாரக்.
எப்போது அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும்?
வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், தொடர்ந்து பல முறை வலிப்பு வந்தால், வலிப்புக்குப் பிறகு மூச்சுத்திணறல் மற்றும் உணர்வு இழப்பு இருந்தால், கர்ப்பிணி பெண் அல்லது சிறுவன் வலிப்பால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இறுதியாக..
வலிப்பு என்பது பொதுவாகக் காணப்படும் ஒரு மருத்துவ பிரச்சனை. அதை மூடநம்பிக்கை வழியில் கையாளாமல், மருத்துவ ரீதியாக சரியான முதலுதவி கொடுத்தால் நோயாளியின் உயிரைக் காப்பாற்றலாம். சாவி கொடுத்தல், வாய் உள்ளே பொருள் வைப்பது போன்ற பழக்கங்களை நிறுத்தி, சரியான விழிப்புணர்வு பெற்றால், வலிப்பு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.