மெனோபாஸ்’ என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் கடைசியாக ஏற்படும் மாதவிடாயைக் குறிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாத போதுதான் அதை இறுதி மாதவிடாய் என்று கூறமுடியும். ஆனால் பொதுவாக மெனோபாஸ் என்று குறிப்பிடுவது இறுதி மாதவிடாய்க்கு முன்னதாக சில வருடங்கள் (3 – 4 வருடம்) உடலளவில் ஏற்படும் மாற்றங்களைத்தான் மெனோபாஸ் என்கிறோம்.
மெனோபாஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
ஒவ்வொரு பெண்ணிலும் கருமுட்டைப் பை, கருமுட்டைகளை உற்பத்தி செய்து, விடுவிக்க ஆரம்பிக்கிறது. அப்போது ஈஸ்ட்ரோஜென் (Estrogen), ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) எனப்படும் ஹார்மோன்களின் துணையினால், பல்வேறு செயல்களின் மூலம், மாதவிடாய் ஆரம்பமாகிறது. இச்செயல் 30 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சுமார் 45 வயதிற்குமேல் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது படிப்படியாகக் குறைந்து சில வருடங்களில் முழுமையாக நின்றுவிடுகிறது. இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது.
இறுதி மாதவிடாய் ஏற்படப் போவதற்கான அறிகுறிகள்:
மாதவிடாயில் மாற்றம்:
இதுதான் பொதுவாக முதலில் ஏற்படும். மாதாமாதம் வராமல் இருப்பது, அதிக அல்லது குறைவான இரத்தப்போக்கு, அதிக நாட்கள் அல்லது குறைவான நாட்கள் இரத்தப்போக்கு.
ஹாட் ஃப்ளஷ்ஸஸ் (Hot flushes):
கிட்டத்தட்ட 75 சதவிகிதப் பெண்களுக்கு இது ஏற்படும். திடீரென முகம், கழுத்து, நெஞ்சுப்பகுதி, பாதம் மற்றும் உள்ளங்கைகள் சூடாகி விடும். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இது நீடிக்கும். இரவு பகல் என்று ஒரு நாளில் பல தடவை இது ஏற்படலாம். சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இது நீடிக்கும். இதன் வீரியம் நபருக்கு நபர் மாறுபடும். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அசௌகரியத்தைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இதனால் உடலுக்கு ஏற்படுவதில்லை.
வியர்வை:
பொதுவாக இரவு நேரங்களில் வியர்க்கும். சிலருக்கு இது தூக்கத்தைப் பாதித்து, ஆடை மற்றும் தலையணை, போர்வைகளைக்கூட நனைத்துவிடும்.
தூங்குவதில் சிரமம் :
படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் சரிவரத் தூக்கம் இருக்காது.
பிறப்புறுப்புகளில் மாற்றம்:
ஈஸ்ட்ரோஜன் குறைவாகச் சுரப்பதால் உலர்ந்து போகும். இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். உடலுறவு கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
சிறுநீர் கழித்தல்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.
எலும்புகள்:
மூட்டு, தசை வலி ஏற்படும். வயதாக ஆக எலும்பு திசுக்கள் குறைந்துகொண்டே வரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்பொழுது எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும். இதைத்தான் ‘ஆஸ்டியோபோரோஸிஸ்’ என்பார்கள். இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எளிதாக சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும்.
முடி:
மாதவிடாய் நின்றபிறகு, அக்குள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரோமம் குறைவாகக் காணப்படும். சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம்.
பற்கள்:
உமிழ்நீர் சுரப்பது குறையும். ஈறுகளில் எரிவு எளிதாக ஏற்படலாம். பற்களும் எளிதில் விழுந்துவிடும்.
இதயம்:
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கும். நெஞ்சு படபடப்பு ஏற்படும்.
சருமம்:
சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். ஜவ்வுத் தன்மை குறைந்து தொய்வு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.
மனோ ரீதியான அறிகுறிகள்:
மனச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version