கண்கள் மனித உடலின் மிக முக்கியமான உணர்வுறுப்பு. இருப்பினும், தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கை முறையால் பல்வேறு கண் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஹைப்பர்மெட்ரோபியா (Hypermetropia / Hyperopia).
நொய்டா கைலாஷ் மருத்துவமனையின் கண் நிபுணர் டாக்டர் கரிமா சவுத்ரி கூறியதாவது, “ஹைப்பர்மெட்ரோபியா என்பது அருகிலுள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத பிரச்சனை. இது குடும்ப மரபில் பரவக்கூடியது. அதனால், நேரத்தில் கண் பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியம்” என்றார்.
ஹைப்பர்மெட்ரோபியா என்றால் என்ன?
ஹைப்பர்மெட்ரோபியா (Hypermetropia) அல்லது தொலைநோக்குப் பார்வை (Farsightedness) என்பது, தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும் ஆனால், அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படும் நிலை.
இதற்கு முக்கிய காரணம் கார்னியா (Cornea) மிகவும் தட்டையாக இருப்பது அல்லது கண் கிண்ணம் (Eyeball) சிறியதாக இருப்பது. இதனால், ஒளிக்கதிர்கள் விழித்திரையில் (Retina) நேரடியாகக் குவியாமல், அதன் பின்னால் குவிகின்றன. அதனால் அருகிலுள்ள பார்வை மங்கலாகிறது.
ஹைப்பர்மெட்ரோபியா ஏற்படும் காரணங்கள்
மரபணு காரணி (Genetic Factor)
குடும்பத்தில் யாருக்காவது ஹைப்பர்மெட்ரோபியா இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். எனவே, இது ஒரு மரபணு சார்ந்த (Hereditary) பிரச்சனை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வளரும் வயது (Age Factor)
வயது அதிகரிக்கும்போது உடல் உறுப்புகள் சீரழியும். அதேபோல், கண் தசைகளின் செயல்பாடும் குறைவதால் பார்வை மங்கலாகிறது. இதுவும் ஹைப்பர்மெட்ரோபியாவை உண்டாக்கும்.
கண்களின் அமைப்பு (Eye Structure)
சிலருக்கு கண் கிண்ணம் சாதாரணத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். கார்னியா மிகவும் தட்டையாக இருந்தாலும், ஒளி விழித்திரையில் சரியாகக் குவியாது. இதுவும் ஹைப்பர்மெட்ரோபியாவிற்கு காரணமாகிறது.
ஹைப்பர்மெட்ரோபியாவின் அறிகுறிகள்
மங்கலான பார்வை (Blurry Vision)
அருகிலுள்ள பொருட்களைப் பார்க்கும் போது தெளிவின்றி மங்கலாகத் தெரியும்.
கண் சோர்வு (Eye Strain)
புத்தகம் படித்தல், மொபைல் பயன்படுத்துதல், நெருக்கமான வேலை செய்வது போன்ற செயல்களில் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.
தலைவலி (Headache)
ஹைப்பர்மெட்ரோபியாவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று. குறிப்பாக, மொபைல் அல்லது கணினியில் நீண்ட நேரம் செலவிடும் போது ஏற்படும்.
கண் சிவத்தல் மற்றும் நீர் வடிதல்
அதிக அழுத்தத்தால் கண்கள் சிவந்து, எரிச்சலாகவும் நீர் வடிகின்றன.
கண் ஆரோக்கியத்திற்கான பரிந்துரைகள்
* மொபைல் மற்றும் கணினி பயன்பாட்டை குறைக்கவும்.
* நீண்ட நேரம் வேலை செய்தால் இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும்.
* சத்தான உணவுகள், குறிப்பாக விட்டமின் A மற்றும் ஓமேகா-3 நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளவும்.
* கண்ணாடி அல்லது லென்ஸ் பயன்படுத்துவதற்கு முன், நிபுணர் ஆலோசனையை பெறவும்.
* வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ளவும்.
இறுதியாக..
ஹைப்பர்மெட்ரோபியா என்பது சாதாரணமான பார்வைக் குறைபாடாக இருந்தாலும், அதை புறக்கணிக்கக் கூடாது. மரபணு, வயது, கண்களின் அமைப்பு போன்ற காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து சரியான சிகிச்சை மேற்கொண்டால், பார்வை ஆரோக்கியத்தை காப்பாற்ற முடியும்.