$
International Day Of Happiness: பூமியில் எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத அற்புத பரிசான “புன்னகை” மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மேலும் “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என நம் முன்னோர்கள் கூறிய பழமொழி, தற்போது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனிதர்களுக்கு ஆயுட்காலம் நீடிக்கும், நோய்கள் விரைவில் நெருங்காது என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் ஆரோக்கியமாக இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியின் மதிப்பை நமக்கு நினைவூட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. மகிழ்ச்சியாக இருக்க மற்றவர்களின் உதவி தேவையில்லை. நவீன வாழ்க்கையில், அவசர முடிவுகள், நிதி சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து குழப்பங்களுக்கு மத்தியில் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் மன உளைச்சல், பதற்றம் போன்ற மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சின்ன, சின்ன மகிழ்ச்சி நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கிறது. அதனை எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்கான பயனுள்ள குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
சுறுசுறுப்பாக இருங்கள்:
எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் கொஞ்சம் நேரம் அமர்ந்தாலே போதும், மனதில் இனம் புரியாத விரக்தியும், சோர்வும் குடிகொள்வதை உணரலாம். எனவே சும்மா உட்காராதீர்கள்.

நடைபயிற்சி, நடனம், உடற்பயிற்சி, விளையாட்டுகள். இவ்வாறு செய்வதால் உங்கள் மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை மனநிலையை மேம்படுத்தும்.
இந்த மேஜிக் வார்த்தை போதும்:
வாழ்க்கையில் பெரியவர்களோ சிறியவர்களோ உங்களுக்கு யாராவது உதவி செய்தால், உதட்டில் சிறிய புன்னகையுடன் நன்றி சொல்ல மறக்காதீர்கள். உங்களை நேசிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.

அம்மாவின் சமையல், மனைவியின் ஆறுதல், குழந்தைகளின் சின்ன சின்ன உதவிகளைக் கூட பாராட்டவும், நன்றி கூறவும் மறக்காதீர்கள்.
இது இல்லை என்றால் சுவாரஸ்யம் இல்லை:

எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத மனிதன் நூல் அறுந்த காத்தாடி போன்றவன். அப்படிப்பட்டவர்கள் என்ன தான் உயர பறந்தாலும், சரியான இலக்கை அடைவதில்லை. எனவே நீங்கள் உங்கள் வேலையிலோ அல்லது உங்கள் பழக்கவழக்கத்திலோ சில இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதனை நோக்கி சீரான எண்ணத்துடன் முன்னேறுவது, மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
இந்த விஷயங்களும் உங்களுக்கு உதவும்:

தினமும் தியானம் செய்யுங்கள். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைச் செய்யுங்கள். இதுபோன்ற நெறிமுறை பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
உஷாரா இருக்கனும்:

பலர் தங்கள் குடும்பங்களுக்கு கொடுக்கும் கவனத்தை தங்களுக்கு கொடுப்பதில்லை. சத்தான உணவை உட்கொண்டு, போதுமான தூக்கம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு நபரின் மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கு சுய கவனிப்பு முக்கிய காரணம்.
Image source: Freepik