Doctor Verified

Newborn Care Week: குளிர்காலமாச்சே! பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

  • SHARE
  • FOLLOW
Newborn Care Week: குளிர்காலமாச்சே! பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..


குளிர்காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது (Newborn Winter Care) என்பது சவாலான விஷயமாகும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு எப்போது சளி பிடிக்கும்? எப்போது காய்ச்சல் வரும்? எப்போது உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. குளிர்காலத்தில் தான் குழந்தைகள் வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். 

குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது (Newborn Winter Care) என்று பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையில் உள்ள நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை மருத்துவம் மூத்த ஆலோசகர், மருத்துவர் பரிமளா வி திருமலேஷ் இங்கே பகிர்ந்துள்ளார். 

பாதிப்பில் புரிதல் 

பெரியவர்களுடன் ஒப்பிடும் போது புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிர்காலத்தில் அதிக பாதிப்புகளிக்கு உள்ளாகின்றன. குழந்தைகளின் உடல் மென்மையாகவும், உணர்திறன் வாய்ந்தவையாகவும், அளவில் சிறியதாகவும் இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு வளர தொடங்கும் நேரம். இதனால் தான் அவர்கள் விரைவில் பாதிப்புகளுக்கு ஆளாவதாக மருத்துவர் கூறினார். 

உடைகளில் கவனம் 

குளிர்காலங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்கேற்ற வகையில் உடைகள் உடுத்திவிட வேண்டும். அதற்காக இருக்கமான ஆடைகளை போட்டுவிட வேண்டாம். ஏனெனில் இது இரத்த ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும். மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதை கடினமாக்கும். அதற்கு பதிலாக, கம்பளி அல்லது பருத்தி போன்ற  தளர்வான ஆடைகளை உடுத்திவிடுங்கள். இது காற்றோட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும். குழந்தைகளுக்கு நீண்ட கை சட்டை மற்றும் முழு பேன்ட் போட்டுவிடவும். இதையடுத்து தொப்பி, ஜாக்கெட், கையுறைகள் மற்றும் காலுறைகளை போட்டுவிட வேண்டும் என்று மருத்துவர் கூறினார். 

வெப்பநிலை பராமரித்தல்

புதிதாகப் பிறந்த குழந்தைகளை 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை உள்ள அறையில் வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் அதிக குளிராக இருந்தால், குழந்தைகள் அசௌகரியமாக உணரலாம். மேலும் அவர்களது உடல், வெப்பத்தை விரைவாக இழக்க நேரிடும். அதே சமையம் அதிக வெப்பமான இடத்திலும் குழந்தைகளை வைக்க கூடாது. ஏனெனில், உங்கள் குழந்தைகள், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறியால் (sudden infant death syndrome, SIDS) பாதிக்கப்படலாம்.

சரியான வெப்பநிலையில் வைத்திருக்க, நீங்கள் ஒரு ஹீட்டர் அல்லது தெர்மோஸ்டாட்டைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதனை குழந்தையின் கட்டிலில் இருந்து விலக்கி வைப்பது முக்கியம். மேலும் உங்கள் குழந்தையின் தொட்டிலில் மின்சாரம் சார்ந்த பொருட்கள் அல்லது சூடான நீர் வைப்பதை தவிர்க்க மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான 9 முக்கியமான தடுப்பூசிகள்!

முறையான சுகாதாரம்

உங்கள் குழந்தையை தூக்குவதற்கு முன்,  கைகளை முழுமையாக கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது கிருமிகள் பரவும் வாய்ப்பைக் குறைக்கும். உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் முன், குறிப்பாக டயப்பரை மாற்றிய பிறகு, நீங்கள் எப்போதும் கைகளைக் கழுவ வேண்டும் என்று மருத்துவர் எச்சரித்தார். 

பிறந்த குழந்தைகளுக்கான உணவு (New Born Food)

குளிரில் உங்கள் குழந்தைக்கு உணவளிக்க சிறந்த அணுகுமுறை தாய்ப்பால் மட்டுமே. உங்கள் குழந்தைக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு கூடுதலாக, தாய்ப்பால் அவர்களை கதகதப்பாக வைக்கும் என்று மருத்துவர் கூறினார்.

நோயிடமிருந்து குழந்தைகளை காப்பது எப்படி? 

உங்கள் குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின் படி தடுப்பூசிகள் போட வேண்டும். இது அவர்களை நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. மேலும், உங்கள் குழந்தையை நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள வேறு யாருக்கோ உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் முகமூடி அணிந்து கைகளை அடிக்கடி கழுவிய பிறகே குழந்தைகளை தொட வேண்டும் என்று மருத்துவர் கூறினார். 

பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு (New Born Skin Care)

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும். இது குளிர்காலத்தில் எளிதில் வறண்டு, எரிச்சலடையும். உங்கள் குழந்தையின் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க மென்மையான க்ளென்சர் மற்றும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும். உங்கள் குழந்தை வறண்ட சருமத்தைப் பெறத் தொடங்கினால், ஒரு நாளைக்கு பல முறை மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.

அசௌகரியத்தின் அறிகுறிகள் 

உங்கள் குழந்தை குளிர்ச்சியாகவோ, சூடாகவோ இருந்தால், அவர்களது அறிகுறிகளை புரிந்துகொள்ள வேண்டும். 

உங்கள் குழந்தை மிகவும் குளிராக இருக்கிறது என்பதற்கான சில குறிகாட்டிகள்:

* நடுக்கம்

* வெளிர் நிற தோல்

* கை கால்கள் ஜில்லென்று இருக்கும்

* மெதுவான சுவாசம்

* சோம்பல்

உங்கள் குழந்தை மிகவும் சூடாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்:

* வியர்த்தல்

* சிவந்த தோல்

* விரைவான சுவாசம்

* சினுங்கள்

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்டது. இது முழுவதும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்கள் குழந்தைகளின் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர்கள் உங்கள் குழந்தையை பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்றவாறு பராமரிப்பு குறிப்புகளை வழங்கலாம். 

Image Source: Freepik

Read Next

குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா. அப்ப இப்படி கொடுங்க.

Disclaimer

குறிச்சொற்கள்