$
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் கூடிய வலி மற்றும் துர்நாற்றம் ஆகியவை யோனி தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் அது என்ன மாதிரியான தொற்று என்பதை அடையாளம் அறிந்து கொள்ளுங்கள்..
பிறப்புறுப்பை நோய் தொற்றுகள் இன்றி ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்காக அனைத்து வகையான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பெண்களின் பிறப்புறுப்பிற்கு தீங்கு விளைவிப்பது கிடையாது?. பெண்ணுறுப்பின் புணர்புழையில் உள்ள சில வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அதன் PH அளவை பராமரிக்கவும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
ஆனால் பெண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான பாக்டீரியா வஜினோசிஸ் (BV) மற்றும் ஈஸ்ட் தொற்று பல நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. இவை பெண்களின் பிறப்புறுப்பில் நல்ல பாக்டீரியா அளவு மற்றும் பிஎச் அளவை பாதிக்கிறது.
பெண்களுக்கு அசெளகரியம் தரக்கூடிய இந்த இரண்டு வகை தொற்றுக்களையும் சில குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டுஅடையாளம் காணலாம்.
கொல்கத்தா அனந்தபூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சுஜாதா தத்தா, ஒன்லி மைஹெல்த்திடம் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதலில் பாக்டீரியா வஜினோசிஸ் மற்றும் ஈஸ்ட் தொற்று என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பாக்டீரியா வஜினோசிஸ் என்றால் என்ன?
ஒரு பொருளின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை அளவீட்டை தீர்மானிக்க pH உதவுகிறது. புணர்புழையில் உள்ள கார்ட்னெரெல்லா வஜினலிஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் பாக்டீரியா வஜினோசிஸ் ஏற்படுகிறது. இது புணர்புழையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை குறைக்கிறது.

இதனால் வலி, அரிப்பு, பிறப்புறுப்பில் எரிச்சல், சிறுநீரை வெளியேற்றும் போது துர்நாற்றம் வீசுவது, சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் யோனி வெளியேற்றம் ஆகியவை நிகழ்கிறது. இவை பாக்டீரியா வஜினோசிஸால் பி.எச். அளவு பாதிக்கப்பட்டதை குறிக்கும் அறிகுறிகளாகும்.
ஈஸ்ட் தொற்று என்றால் என்ன?
பெண்ணுறுப்புகளில் ஏற்படும் பொதுவான தொற்றுகளில் ஈஸ்ட் தொற்று என்படும் பூஞ்சை தொற்றும் ஒன்று. இது பிறப்புறுப்பில் ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகிறது. எரிச்சல், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்புன் உள்புறத்தில் அரிப்பு அல்லது எரியும் தன்மை உண்டாவது ஈஸ்ட் தொற்றின் அறிகுறிகளாகும்.
இதன் சில அறிகுறிகள் பாக்டீரியா வஜினோசிஸ் போலவே இருக்கலாம். இருப்பினும் கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு இரண்டிற்குமான வித்தியாசத்தை கண்டறிய உதவும்.
பாக்டீரியா வஜினோசிஸ் Vs ஈஸ்ட் தொற்றுக்கு இடையிலான வேறுபாடு:
பாக்டீரியா வஜினோசிஸ் மற்றும் ஈஸ்ட் தொற்றுக்கு இடையிலான வேறுபாடு குறித்து மருத்துவர் சுஜாதா தத்தா கூறுகையில், “பிறப்புறுப்பில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகப்படியாக வளர்ச்சியடைவதால் பாக்டீயா வஜினோசிஸ் ஏற்படுகிறது. அதேசமயம், கேண்டிடா எனப்படும் ஒரு வகை பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சியே ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாகிறது”என்கிறார்.
பாக்டீரியா வஜினோசிஸ் தொற்றின் போது, மீன் வாசனை, மெல்லிய சாம்பல்-வெள்ளை நிறத்தில் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அரிப்பு அல்லது எரிச்சல் ஆகியவை ஏற்படும் என்றும், அதேசமயம் ஈஸ்ட் தொற்றின் போது தடித்த, தயிர் போன்ற வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்படும் என்றும் மருத்துவர் சுஜாதா வேறுபடுத்து காட்டுகிறார்.
தொற்று வகையை கண்டறிவது எப்படி?
வெள்ளைப்படுத்தல் மாதிரியை சேகரித்து மைக்ரோஸ்கோப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக பாக்டீரியா வஜினோசிஸ் மற்றும் ஈஸ்ட் தொற்றை கண்டறியலாம் என மருத்துவர் சுஜாதா தத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் நோய்த்தொற்றின் காரணத்தை தீர்மானிக்க, மருத்துவர் பிறப்புறுப்பு சுரப்புகளை பரிசோதிப்பார் என்றும், அதற்கேற்ப சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார் என்றும் கூறியுள்ளார்.

சிகிச்சை முறை:
- பாக்டீரியா வஜினோசிஸ் சிகிச்சையின் போது வாய்வழியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயோடிக்ஸ்கள் அல்லது பெண்ணுறுப்பில் தடவக்கூடிய கிரீம் அல்லது ஜெல் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஈஸ்ட் தொற்றுக்கு ஆன்டி ஃபங்கல் (பூஞ்சை காளான்) மருத்துவகளுடன் யோனியில் நேரடியாக அப்ளே செய்யக்கூடிய வகையிலான கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
- இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது மற்றும் புரோபயாடிக்குகளை உட்கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஈஸ்ட் தொற்றுகளைத் தடுக்க உதவும் என மருத்துவர் சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.