Hemoglobin Rich Food: மனித உடலுக்கு ஹீமோகுளோபின் அளவு என்பது மிக முக்கியம். ஹீமோகுளோபின் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது. ஹீமோகுளோபின் குறைந்தால் அனீமியா பிரச்சனை ஏற்படத் தொடங்குகிறது. உடல் அதன் செயல்பாடுகளை செய்வதே மிகக் கடினமாகும்.
ஹீமோகுளோபின் என்பது நமது இரத்தத்தில் உள்ள புரதம். இது இரத்த சிவப்பணுக்களில் காணப்படுகிறது. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் தான் காரணம். இந்த செல்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றன. உடல் முழுவதும் ஆக்ஸிஜனை செல்வதோடு, ஹீமோகுளோபின் சிவப்பு இரத்த அணுக்களிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நுரையீரலுக்குள் கொண்டு செல்கிறது. நாம் சுவாசிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

உடலில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வோம். ஆண்களுக்கு 13 கிராம், பெண்களில் 12 கிராம், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 11 கிராம், கர்ப்பிணிப் பெண்களில் 11 கிராம் என இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதை விட குறைவாக இருந்தால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், சோம்பல், ஹார்மோன் பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, முடி உதிர்தல், தோல் வெளிறிப்போதல், கருச்சிதைவு போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காரணமாக ஆண்களை விட பெண்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரி, உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை எப்படி என இப்போது பார்க்கலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி?

டேட்ஸ்
பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. இரத்த சோகை குறையும். பேரீச்சம்பழத்தில் தாமிரம் நிறைந்துள்ளது, இது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. பேரிச்சம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்த சோகை நீங்கும். இதுகுறித்த ஆய்வில், பேரீச்சம்பழத்தை பாலில் காய்ச்சி 18 முதல் 55 வயதுள்ளவர்களுக்கு பத்து நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின், ரத்தப் பரிசோதனை செய்தபோது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.
எள்
எள் விதைகளில் இரும்பு, ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள், தாமிரம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் போன்ற பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை இரத்த சோகையை சமாளிக்க உதவும். எள்ளில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை பிரச்சனை குறையும். ரத்தசோகையால் அவதிப்படுபவர்களும், சோம்பலால் பலவீனமாக இருப்பவர்களும் எள்ளும் வெல்லமும் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்லது.
தினை
தினைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் மற்றும் சீரம் ஃபெரிடின் அளவை மேம்படுத்த முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. தினையில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுகக்கள் அதிகம். இதை ஒரு முறை உட்கொண்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அன்றைய தினம் கிடைக்கும். இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் மற்றும் ஹீமோகுளோபின் சதவீதம் அதிகரிக்க விரும்புபவர்கள் அடிக்கடி தினை எடுத்துக் கொள்ளலாம்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இதை அவசியமாக எடுத்துக் கொள்ளலாம். உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
இதையும் படிங்க: என் நெற்றியில் ஏற்படும் கருமையை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?
இந்த பதிவில் உள்ள தகவல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் என்றாலும் தீவிரத்தை உணர்ந்து மருத்துவரை அணுகி பரிந்துரையை பெற்றுக் கொள்வது நல்லது.
image source: freepik