ஆண், பெண் இருவருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி அள்ளி தரும் கானா வாழை பற்றி உங்களுக்குத் தெரியுமா?. முகப்பரு முதற்கொண்டு குழந்தை பேறு வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய இது ஆயுர்வேதத்தில் பிரபலமான மூலிகையாகும். இது கானான் வாழை, கானான் கோழிக் கீரை, காணாம் வாழை என்றும் அழைக்கப்படுகிறது.
கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாகிஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன்படுத்தினர். தொழுநோய் புண்களை சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்துகின்றனர். கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் களையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வளரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும்.
இதன் மருத்துவ நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவரான மைதிலி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ள முழு விளக்கம் குறித்து பார்க்கலாம்.
முகப்பரு நீங்க:
முகத்தில் முகப்பரு அல்லது முகப்பரு காய்ந்து உருவாகும் கரும்புள்ளிகளை நீக்க, கானா வாழை கீரையை அரைத்து அதன் சாற்றை நன்றாக கெட்டியாக எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து, முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவுங்கள். தினமும் ஒரு முறை வீதம் 15 நாட்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால், கரும்புள்ளி, முகப்பரு இரண்டுமே இருந்த இடம் தெரியாமல் இயற்கையாக மறைந்து போகும்.
மூல நோய்க்கு அருமருந்து:
கானா வாழை இலை நீர்ச்சத்து நிறைந்தது. இதனால் உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த முடியும். எனவே இது ப்ளீடிங் பைல்ஸ் எனப்படும், ரத்தப்போக்கு மூல வியாதிக்கு ஆயுர்வேத மருந்தாக உள்ளது.
கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.
“ஒரு கைப்பிடி அளவு கானா வாழைக்கீரை எடுத்துக்கோங்க. கூடவே சம அளவுல துத்திக்கீரை எடுத்துக்கோங்க. ஒரு கைப்பிடி அளவு இதை ரெண்டையும் நல்லா சேர்த்து அரைத்து, மைய விழுது மாதிரி அரைத்து எடுத்துக்கோங்க. அதை ஒரு காடா துணியில நடுவுல வைத்து நல்லா பிழிந்து எடுத்தீங்க அப்படின்னும் அதோட சாறு கிடைக்கும். அந்த சாறு 25 மில்லி காலையில வெறும் வயித்துல தொடர்ச்சியா ஒரு நாளைக்கு ஒருமுறைன்னு10 நாட்கள் குடிச்சிட்டே வந்தீங்கன்னா. மூல வியாதியினால ஏற்படக்கூடிய ரத்தப்போக்கு படிப்படியா குறையும்”
குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு:
குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுக்கக்கூடிய ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகப்படுத்தவும், விந்தணுக்களோட எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களோட தரம் இரண்டையும் இயற்கையாவே அதிகப்படுத்தக்கூடிய தன்மை கானா வாழைக் கீரையில் உள்ளது.
அதற்கு நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்துடன் தொடர்ந்து 10 நாட்களும், அதன் பிறகு வாரத்திற்கு ஒருமுறையும் சாப்பிட்டு வந்தால் விந்தணு மற்றும் ஆண்மை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும்:
நீர்ச்சத்து நிறைந்த இந்த கீரையை மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி. அப்படி எடுத்துக்கொண்டால் உடல் உஷ்ணம் குறைந்து சமநிலை அடையும் என்கிறார்.
“உடல் சூடு அதிகமான காரணத்தினால் ஒரு சிலருக்கு சிறுநீர் கடுப்பு ஏற்படும். சிறுநீர் பாதையில் ஏதாவது தொற்று இருக்கு அப்படின்னா அதையும் இயற்கையாவே சரி பண்ணக்கூடிய தன்மை இந்த கானா வாழை கீரையில் ரொம்பவே அதிகமா இருக்கு. அதே மாதிரி சிறுநீரகத்தை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமா செயல்பட வைக்கும்” என்கிறார்.
பெண்களுக்கு இவ்வளவு நல்லதா?
பெண்கள் அனைவரும் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான கீரையில் இந்த கானா வாழையும் ஒன்று. பெண்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமான காரணத்தினால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இதை குறைக்கவும், மாதவிடாய் சீராய் வரவும் கானா வாழை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உதவும். கானா வாழை இலையை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.
மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருக்கும் பெண்கள், கானா வாழை கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
புண்களை ஆற்றும் அற்புத மருந்து:
வாய் புண், நாக்கு புண், தொண்டை கரகரப்பு ஆகியவற்றிற்கும் கானா வாழை சிறந்த மருந்து. கானா வாழை இலையுடன் கல் உப்பு, மஞ்சள் சேர்த்த தண்ணீரை கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் பலன் கிடைக்கும். பற்கள் நல்ல வலுவடையும்.
இதுகுறித்து மருத்துவர் மைதிலி கூறுகையில், “சும்மா ஒரு 10 இலை எடுத்துக்கோங்க. ரெண்டு கிளாஸ் தண்ணில நல்லா கொதிக்க வைங்க. ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு, இந்த தண்ணி வெதுவெதுப்பான சூட்டுல இருக்கும்போது வடிகட்டி வாய் கொப்பளிங்க. இதை தொடர்ந்து பண்ணிட்டு வந்தீங்கன்னா. வாய் பகுதியில, தொண்டை பகுதியில இருக்கக்கூடிய புண்ணோட ரணம் சீக்கிரமே ஆறதோட மட்டும் இல்லாம, பல் இடுக்குல தங்கி இருக்கக்கூடிய கிருமிகளை இயற்கையாவே வெளியேற்றவும் செய்யும்” என்கிறார்.
நீரழிவு நோயாள் கூட காலில் இருக்கும் புண்ணுக்கு கானா இலையை அரைத்து பத்து போட்டு வந்தல் நாளாடைவில் புண் ஆற ஆரம்பிக்கும் என்கிறார்.