இன்று அதிகாலை ஏ.ஆர். ரஹ்மான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. நேற்று லண்டனில் இருந்து திரும்பி வந்து உடனேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு நீரிழப்பு பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் ரம்ஜான் நோன்பு நோற்றிருப்பதால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர்கள் எனக்கு உறுதியளித்தனர். இது ஒரு நிம்மதி." என பதிவிட்டார்.
அவரது மகன் அமீன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாவது: "எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என் தந்தை நீரிழப்பு காரணமாக பலவீனமாக இருந்தார், எனவே நாங்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் கவனிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்."
மருத்துவ பரிசோதனைகளை முடித்த பிறகு, ஏ.ஆர். ரஹ்மான் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?
இன்று காலை 7:30 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தினர். ஆரம்ப அறிக்கைகள் அவருக்கு மார்பு வலி இருப்பதாகவும், ஆஞ்சியோகிராம் எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தன. பின்னர் அவருக்கு நீரிழப்பிற்கான சிகிச்சையுடன், வழக்கமான உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, இசையமைப்பாளர் நலமாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவரது மேலாளர் இப்போது தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
Image Source: Freepik