மூளை ஆரோக்கியம் என்பது நம் உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம். ஆனால், நாம் கவனிக்காமல் செய்யும் சில தினசரி பழக்கங்கள் நம் மூளையின் செயல்பாடுகளை அமைதியாக பாதித்து வருகின்றன. இதுகுறித்து பிரபல மருத்துவர் டாக்டர் பால் மாணிக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள எச்சரிக்கை, தற்போது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவை என்னவென்று இங்கே காண்போம்.
மூளை ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்கள்
உறக்கத்தை தவிர்ப்பது
போதுமான தூக்கம் கிடைக்காமல் இருந்தால், மூளையில் தேங்கும் நச்சுக்கள் வெளியேறாமல் போகின்றன. இதனால் நினைவுத்திறன் குறைவு, கவனம் சிதறல், முடிவெடுக்கும் திறன் பாதிப்பு ஏற்படும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. ஆராய்ச்சிகளின்படி, இது ஹிப்போகாம்பஸ் (நினைவக பகுதி) சுருங்குவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
அடிக்கடி மல்டிடாஸ்க் செய்வது
ஒரே நேரத்தில் பல வேலையைச் செய்யும் பழக்கம் நம் கவனத்தைச் சிதறச் செய்து, வேலை திறனை குறைத்து, நினைவுத்திறனை பாதிக்கிறது.
தவறான உணவுமுறை
அதிகமாக ஜங்க் உணவுகள், சர்க்கரை நிறைந்த பொருட்கள் உட்கொள்வது மூளையில் அழற்சியை அதிகரித்து, நரம்பு செல்களை சேதப்படுத்தும்.
நீண்டகால மன அழுத்தம்
அதிகமான மன அழுத்தம் கோர்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்துகிறது. இது ஹிப்போகாம்பஸ் பகுதியை சேதப்படுத்தி, நினைவுத்திறனை பாதிக்கிறது. மேலும், தூக்கக் கோளாறுகளையும் உண்டாக்கும்.
சமூக தொடர்புகளை தவிர்ப்பது
மனிதன் சமூக விலங்கு. சமூக தொடர்பின்மை, தனிமை போன்றவை மன அழுத்தம், மன அழுத்தத்தால் ஏற்படும் மனச்சோர்வு, நினைவிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்றன.
காதில் ஹெட்போன் வைத்து அதிக சத்தமுள்ள இசை கேட்பது
நீண்ட காலம் அதிக சத்தத்தில் இசை கேட்பதால், கேள்வித் திறன் குறைவு ஏற்படும். இது மூளை அதிகமாக உழைக்க வைத்தும், பின்னர் மதியீனம் (Dementia) அபாயத்தை அதிகரிக்கிறது.
அறிவுத்திறனை தூண்டும் செயல்களை புறக்கணிப்பது
புதிய விஷயங்களை அறியாதது, புத்தக வாசிப்பை தவிர்ப்பது, புதிர்களை செய்யாமல் இருப்பது ஆகியவை மூளையின் நரம்பு இணைப்புகளை பலவீனப்படுத்தும்.
போதுமான தண்ணீர் குடிக்காதது
சிறிய அளவு நீரிழப்பு (Dehydration) கூட, கவனம் குறைவு, நினைவுத்திறன் குறைவு, இரத்த ஓட்ட குறைவு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
படுக்கும் முன் அதிக ஸ்கிரீன் டைம்
மொபைல், லேப்டாப் போன்றவற்றின் நீல ஒளி (Blue Light), மெலட்டோனின் ஹார்மோனை குறைத்து, தூக்கத்தின் தரத்தைக் கெடுக்கிறது. இதனால் நினைவுத்திறன் மற்றும் கவனம் பாதிக்கப்படுகிறது.
View this post on Instagram
இறுதியாக..
தினசரி வாழ்க்கையில் நாம் அற்பமாகக் கருதும் சில பழக்கங்கள் கூட, நம் மூளை ஆரோக்கியத்திற்கு பெரும் அபாயமாக இருக்க முடியும். போதுமான உறக்கம், நல்ல உணவுமுறை, தண்ணீர் உட்கொள்ளுதல், சமூக தொடர்பு, மன அழுத்த கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பது மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிகள்.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ அறிவுரைக்கான மாற்றாகாது. மூளை ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் இருந்தால், நிபுணர் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.