நாம் அஞ்சும் காட்டு விலங்கினங்களை விட மிக கொடிய உயிரினம் நம்மை சுத்திக் கிடக்கும் கொசுக்கள். பார்க்க சிறிய அளவிலும், நாம் கை ஓங்கினால் பயந்து ஓடும் உயிரினம் தான் கொசு. ஆனால் அது ஏற்படுத்தும் நோய்களும் பாதிப்புகளும் ஒரு மனிதரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். சிறிய கடி தான் கடிக்கும் ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
சிறிய அளவில் பறந்து வரும் கொசுக்கள் காதுகளில் ஒலி எழுப்பும், எதிர்பாராத நேரத்தில் கண்ட இடத்தில் கடிக்கும் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். கொசுக்களில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை கொசுக்களும் ஒவ்வொரு மாதிரியாக கடிக்கும் என்றும் பலர் கூறுவதுண்டு. சில கொசுக்கள் எப்போது வந்தது, எப்போது கடித்தது, எப்போது மறைந்தது என்றே பலருக்கும் தெரியாது.
கொசுக்களின் வகைகள்
ஏடிஸ், அனோபிலிஸ், குலெக்ஸ், குலிசேதா, மான்சோனியா, சொரோபோரா, வயோமியா என பல வகை கொசுக்கள் உள்ளது. மழைக்காலம், கோடை காலம், குளிர் காலம் என எந்தக் காலத்திலும் கொசுக்கள் வருவது சகஜம். குறிப்பாக மழைக்காலம் மற்றும் கோடைகாலங்களில் இரவில் கொசுக்கள் ஏற்படுத்தும் தொல்லை என்பது தாங்க முடியாததாக இருக்கும்.
கொசுக்களில் இரண்டு வகை உண்டு. அது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக ஆண் கொசுக்கள் கடிக்காது. அவர்கள் எந்த நோய்களையும் சுமப்பதில்லை. எல்லாப் பிரச்சனையும் பெண் கொசுக்களால் ஏற்படுகிறது. அவை மனித இரத்தத்தை கடித்து உறிஞ்சும். பெண் கொசுக்கள் இரத்தமின்றி முட்டையிட முடியாது என அறியப்படுகிறது. கொசுக்கள் கடிக்கும் போது, தோல் அடிக்கடி வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
கொசு கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. கொசுக்கள் ஸ்டிங்கர்ஸ் போன்ற புரோபோஸ்கிஸ் மூலம் இரத்தத்தை உறிஞ்சாது. கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் தோலில் கலந்துவிடும். அதனால்தான் கொசு கடித்த உடலின் பாகம் வீங்குகிறது. அது நமைச்சலை ஏற்படுத்துகிறது. கொசு கடித்தால் பெரும்பாலும் கடுமையான நோய்கள் ஏற்படுகின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. சில சமயங்களில் வீக்கமடைந்த பகுதியின் அரிப்பிலிருந்தும் தொற்று ஏற்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.
இதுகுறித்து டிக்டாக்கர் மற்றும் தோல் மருத்துவரான Lindsey Zubritsky கூறியதாக nypost இல் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து பார்க்கலாம்.
கொசு அதிகம் கடிக்க காரணம் என்ன?
வியர்வை மற்றும் அதிக வெப்பம் உள்ளவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக அமோனியா, யூரிக் அமிலம், லாக்டிக் அமிலம் போன்றவற்றால் ஈர்க்கப்படும். கொசு கடிப்பதற்கான மற்றொரு காரணி பீர் என்றால் நம்ப முடிகிறதா. கொசுக் கடிக்கு உங்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக மாற்றும் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் பீர் குடிப்பது. ஒரு 12-அவுன்ஸ் (350 மில்லி) பீர் குடித்தால் கொசுக்கள் உங்களை கவர்ந்திழுக்கும் என கூறப்பட்டுள்ளது.
நம் தோலில் வாழும் பாக்டீரியாக்களின் வகை மற்றும் எண்ணிக்கையும் கொசுக்களை கவர்ந்திழுக்கும். எந்த பகுதிகளில் வலுவான பாக்டீரியா எண்ணிக்கை உள்ளதோ அந்த பகுதிகளில் கொசுக் கடி அதிகமாக இருக்கு் என கூறப்படுகிறது. இதனால் தான் கணுக்கால் போன்றவற்றில் கொசுக்கடி அதிகமாக இருக்கும்.
இன்னொரு விஷயம், கொசுக்கள் கார்பன் டை ஆக்சைடால் ஈர்க்கப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு கனமாக சுவாசிக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக கொசுக்களை ஈர்ப்பீர்கள் என்றும் கூறப்படுகிறது.
கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு இவை அனைத்தும் காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கடியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக மழைக்காலங்களில். உடலில் ஏதேனும் தீவிரத்தையோ, அசௌகரியத்தையோ உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik