$
New Covid-19 2024: கொரோனாவின் தாக்கம் தணிந்து மழை வெள்ளம், வெயில், வெப்ப அலை என அடுத்தடுத்த பாதிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனா என்ற சொல்லே கேள்விப்பட்டு நீண்ட நாள் இருக்கும். கிட்டத்தட்ட ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா என்ற சொல் மீண்டும் காதில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது இரண்டு புதிய கோவிட் வகைகள் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன. அமெரிக்காவில் தானே நமக்கு என்ன என்று எடுத்துக் கொள்ள முடியாது, காரணம் சீனாவின் ஏதோ ஒரு மூலையில் பரவத் தொடங்கிய கொரோனா தான் உலகையே ஆட்டிப்படைத்தது. இந்த புதிய வகை கொரோனா குறித்த தகவலை பார்க்கலாம்.
புதிய வகை கொரோனா 2024
ஓமிக்ரானின் JN.1 வம்சாவளியைச் சேர்ந்த புதிய கோவிட்-19 வைரஸானது அமெரிக்காவில் பரவி வருகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்த் தொற்றுகளில் இதுவும் ஒன்றாக இணைந்து புதிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த இரண்டு புதிய கோவிட் வகைகளானது KP.2 மற்றும் KP 1.1 என அழைக்கப்படுகிறது. இது முந்தைய ஒமிக்ரான் வகைகளை காட்டிலும் தீவிரமானதாகவே கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பரவும் Flirt வகை கொரோனா
புதிய வைரஸ் பாதிப்புகளின் அறிகுறிகள் சமயத்தில் தீவிரமாகவோ அல்லது லேசாகவோ இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் KP.2 ஆனது JN.1 மாறுபாடாகவும், KP.1.1, FLirt மாறுபாடாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த வழக்குகள் அமெரிக்காவில் குறைவாகவே உள்ளது என ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இன்ஃபெக்சியஸ் டிசீஸ் சொசைட்டியின் தகவல்படி, இவைகளை FLirt என்ற தொழில்நுட்ப பெயர்களுடன் அடையாளம் காணப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் இந்த பாதிப்புகளின் ஒரு சிறிய எழுச்சி காணப்படுவதாக கூறப்படுகிறது.
FLirt என்றால் என்ன?
FLirt என்பது அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் வகைகளின் புனைப்பெயர் ஆகும். இது கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட JN.1 வகையின் வழித்தோன்றலாக கூறப்படுகிறது.
FLirt அறிகுறிகள் என்ன?
FLirt அறிகுறிகள் குறித்து பார்க்கையில் இது ஃப்ளூ அறிகுறிகள், உடல் வலி மற்றும் சில சமயங்களில் செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
"FLiRT என்பது Omicron JN.1 வம்சாவளியிலிருந்து தோன்றிய புதிய SARS-CoV-2 வகைகளை குறிக்கிறது. அமெரிக்கா முழுவதும் இது வேகமாகப் பரவி வருகிறது. மிக முக்கியமான FLiRT மாறுபாடானது KP.2 பாதிப்பை குறிக்கிறது. இதுவே அமெரிக்காவில் இல் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஏப்ரல் 2024 நிலவரப்படி, சுமார் 25% புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன" என இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் சுவாச, கிரிட்டிகல் கேர் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் நிகில் மோதி கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய ஒமிக்ரான் துணை வகைகளுடன் ஒப்பிடுகையில் இதன் பரவும் தன்மை கணிசமாக அதிகரித்துள்ளது. தொண்டை புண், இருமல், சோர்வு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசைவலி, காய்ச்சல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு போன்ற பிற ஓமிக்ரான் துணை வகைகளின் அறிகுறிகள் இதிலும் அடங்கும் எனவும் மருத்துவர் நிகில் மோதி கூறியுள்ளார்.
இந்தியாவை புதிய வகை கொரோனா FLiRT பாதிக்குமா?
இந்தியாவை பொறுத்தவரை இதனால் அச்சம் அடையும் காரணம் குறைவு எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் FLiRT இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், நாட்டின் அதிக மக்கள்தொகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் மாறுபட்ட நிலைகளை கருத்தில் கொண்டால் இந்த வகைகளின் சாத்தியமான பரவல் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர் மோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வரும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். இனி வரும் காலங்கள் முழுவதும் உலகளாவிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.