கோவிட்-19க்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன. உலகம் முழுவதும் மர்மமான நோய்களால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் தற்போது ஒரு மர்மமான நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு மாதத்திற்குள் 50 பேர் அடையாளம் தெரியாத வைரஸால் உயிரிழந்தனர். இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். வௌவால்களை சாப்பிட்ட மூன்று குழந்தைகளில் இந்த நோய் முதலில் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கோவில் உயிர் கொல்லி வைரஸ் கண்டறியப்பட்டது எப்படி?
Crying Disease என அழைக்கப்படும் இந்த மர்ம நோய் முதன் முதலில் ஜனவரி 21ம் தேதி இறந்த வெளவால் கறியைச் சாப்பிட்ட 5 வயதான மூன்று குழந்தைகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நோய்க்கான காரணமும், தன்மையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மர்ம நோயின் அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், வாந்தி, உள் ரத்தப்போக்கு போன்றவை இந்த நோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கூறப்படுகிறது. நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது உடல்வலி, கழுத்து மற்றும் மூட்டு வலி, மூச்சு வாங்குதல், வியர்த்துக் கொட்டுதல், தீவிர தாகம் ஏற்படுவதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சில குழந்தைகளிடம் இடைவிடாத அழுகை, ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு, எபோலா, மார்பர்க், மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களில் தென்படக்கூடிய அறிகுறிகள் இந்த வைரஸுடன் ஒத்துப்போவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
உலக சுகாதார அமைப்பு (WHO) இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறது. இந்த நோய் உண்மையில் ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது. அது மலேரியா அல்லது வைரஸ் காய்ச்சல் போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று உலக சுகாதார மையம் எண்ணுகிறது. இது நீர் மாசுபாட்டால் ஏற்பட்டதா அல்லது உணவு மாசுபாட்டால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நோய் தொற்றக்கூடியதா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நோய் பரவியுள்ள பகுதியில் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. எனவே, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. நோயாளிகள் இனி தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவதில்லை. அவர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழுக்களாக நடமாடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.