$
Alzheimers Disease: முதுமைப் பருவம் என்பது உடலில் பல மாற்றங்களை கொண்டு வரலாம். தசை நிறை குறைதல், எலும்பு அடர்த்தி குறைதல், வளர்சிதை மாற்றம், தோல் சுருக்கம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு என பல நிலைகளை சந்திக்க நேரலாம். அதோடு ஒருசிலருக்கு மூளையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மறதி என்பது வயதானதற்கான பொதுவான அறிகுறியாகும், இது தீங்கற்றது என்றாலும் சிலருக்கு அல்சைமர் போன்ற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
அல்சைமர் என்பது நரம்பியல் கோளாறு ஆகும். இது கடுமையான நினைவாற்றல் இழப்பு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி போன்றவைக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் இது ஆபத்தாகவும் முடியலாம்.
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
அல்சைமர் நோய் குணப்படுத்த முடியாத நோயாகும். இருப்பினும் நோயை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து வளரவிடாமல் தடுக்கலாம். இந்த உலக அல்சைமர் தினமான 2023 இல், அல்சைமர் நோயைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
டிமென்ஷியா என்பது பொதுவான வகை
முதுமைப் பருவத்தின் மறதிக்கான பொதுவான நோயாக அல்சைமர் இருக்கிறது. டிமென்ஷியா என்பது மனநலக்கோளாறுகள், இது இளமைப்பருவம் அல்லது குழந்தைப் பருவம் உட்பட எந்த வயதிலும் தோன்றலாம். இது ஒரு நோய் அல்ல. நினைவாற்றல், சிந்தனை மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் தொடர்பான பிரச்சனை ஆகும்.
ஆனால் அல்சைமர் நோய் நரம்பியல் நிலையை குறிக்கும் நோயாகும். இது மூளையில் உள்ள அசாதாரண புரதம் நினைவகத்தை மோசமாக்குகிறது. இது ஒரு நபரின் சிந்தனை திறன்களைத் தடுக்கிறது.
- டிமென்ஷியா வகைகள்
- வாஸ்குலர் டிமென்ஷியா
- லூயி உடல் டிமென்ஷியா
- கலப்பு டிமென்ஷியா (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிமென்ஷியா வகைகளின் கலவையாகும்)
- ஹண்டிங்டன் நோய் (முற்போக்கான டிமென்ஷியாவை ஏற்படுத்தும் ஒரு மரபணு கோளாறு)
நோய் பரவலுக்கான காரணங்கள்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி , உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமானோர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வழக்குகள் பதிவாகின்றன. அல்சைமர் நோய் முதுமை மறதியின் மிகவும் பொதுவான வடிவமாகும்,
அமெரிக்காவில், 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 50.8 லட்சம் பேர் அல்சைமர் நோயுடன் வாழ்கின்றனர் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்ட 80 லட்சத்துக்கும் அதிகமானோர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7.4% பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அல்சைமர் சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
அல்சைமர்ஸ் மற்றும் ரிலேட்டட் டிஸார்டர்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆய்வுப்படி, 2010ம் ஆண்டில் 30.7 லட்சம் இந்தியர்களுக்கு டிமென்ஷியா இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2030க்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களுக்கு அல்சைமர் ஆபத்து அதிகம்

ஆண்களை விட பெண்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று அல்சைமர் சங்கத்தின் அறிக்கை கூறுகிறது. சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 60 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் அல்சைமர் நோயுடன் வாழ்கின்றனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். அல்சைமர் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கான ஆபத்து காரணிகளில் பெண்களுக்கு 5ல் 1 என்ற வீதமும் ஆண்களுக்கு 10ல் 1 என்ற வீதமும் இருக்கிறது. அதாவது பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு விகிதம் குறைவுதான்.
அல்சைமர் நோயின் ஆபத்துக்கான காரணங்கள்
- அல்சைமர்ஸின் குடும்ப வரலாறு
- மீண்டும் மீண்டும் அல்லது கடுமையான தலை காயங்கள்
- உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகள்
- புகைபிடித்தல், தவறான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களும் இதற்கு காரணம்.
- சில சுற்றுச்சூழல் நச்சுகள், காற்று மாசுபாடு, தூக்கமின்மை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கிறது.
நினைவாற்றல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் அல்சைமர் நோயை குறிக்காது:
மறதி என்பது அல்சைமர் நோயின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். இருப்பினும், நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ள அனைவருக்கும் அல்சைமர் இல்லை என்று தேசிய முதியவர் நிறுவனம் கூறுகிறது.
நினைவாற்றல் பிரச்சினைகளுக்கான பிற பொதுவான காரணங்களில் வயது முதிர்வு, மருத்துவ நிலை, உணர்ச்சிப் பிரச்சினைகள் மற்றும் லேசான அறிவாற்றல் குறைபாடு ஆகியவை அடங்கும், அல்சைமர் மட்டுமல்ல, மற்ற வகையான டிமென்ஷியாவும் நினைவாற்றல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அல்சைமர் மரணத்திற்கு முக்கிய காரணம்
அல்சைமர் நோய் அமெரிக்காவில் இறப்புக்கான ஆறாவது முக்கிய காரணமாகும், அல்சைமர் சங்கத்தின் கூற்றுப்படி, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் 1 இறப்பு இந்த நோயால் ஏற்படுகிறது. CDC பகிர்ந்த அறிக்கைகளின்படி, 2019 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அல்சைமர் நோயால் 121,499 பேர் இறந்துள்ளனர்.
அல்சைமர் நோயின் தீவிரநிலை

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையில் தங்களுக்கு இந்த நிலை இருப்பது தெரியாமல் இருப்பதாகும். குறிப்பாக ஆரம்ப கட்டங்களில். இது அனோசோக்னோசியா எனப்படும் ஒரு நிலைக்கு காரணமாக இருக்கலாம்.
அனோசோக்னோசியா என்பது ஒரு நரம்பியல் நிலை, இது ஒருவர் தங்களது இயலாமை மற்றும் நோய் உள்ளிட்டவைகளை அடையாளம் காண முடியாமல் இருப்பதை குறிக்கிறது. இதை கவனிக்கப்படாமல் இருப்பதே தீவிர நிலைக்கு வழிவகுக்கிறது.
அல்சைமர் நோய்க்கான சிகிச்சை
தற்போதைய நிலைப்படி அல்சைமர் நோய்க்கு சிகிச்சை ஏதும் இல்லை. இருப்பினும், தற்போதுள்ள சிகிச்சைகள் நினைவாற்றல் இழப்பு, சிந்தனை செயல்பாடு உள்ளிட்ட சிக்கல்களை குறைத்து பிரச்சனைகள் தீவிரமடையவிடாமல் தடுக்கின்றன.
2023 இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) லேசான அல்சைமர் நோய் மற்றும் அல்சைமர் நோயின் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு lecanemab என்ற சிகிச்சை வழங்க அங்கீகரித்தது.
இது ஆரம்பகால அல்சைமர் நோயுடன் வாழும் மக்களின் அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டுக் குறைவைக் குறைக்கிறது. அல்சைமர் போன்ற ஏதேனும் லேசான அறிகுறிகள் தென்பட்டால். சிகிச்சை திட்டத்தை உருவாக்க மருத்துவ ஆலோசகரின் அணுகலை பெறுவது நல்லது.
Image Source: Freepik