How to use shikakai powder for hair wash: பெண்கள் பலரும் நீண்ட, அடர்த்தியான, கருப்பு மற்றும் வலுவான கூந்தலைப் பெறவே விரும்புகின்றனர். இதற்கு அவர்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க பல கூந்தல் பராமரிப்பு பொருட்கள், ஷாம்புகள், கண்டிஷனர்கள் போன்ற சந்தையில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சந்தையில் வாங்கக்கூடிய இந்தப் பொருள்கள் பெரும்பாலும் ரசாயனம் கொண்டவையாகும். இவை தற்காலிகமாக முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பினும், நிரந்தர தீர்வைத் தராது. மேலும் இது தலைமுடியை படிப்படியாக சேதப்படுத்தலாம்.
எனவே தான், தலைமுடியை பராமரிக்க ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. இவை தலைமுடியை இயற்கையான முறையில் வளர்த்து, அவற்றை வலிமையாக்க உதவுகின்றன. இதில் சீயக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவே சீயக்காய் கூந்தல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் இது ஒரு சிறந்த கிளென்சர் மற்றும் டானிக் ஆக நன்கு அறியப்படுகிறது. இவை முடியை சுத்தம் செய்வதற்கு மட்டுமல்லாமல், வேர்களிலிருந்து அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இதில் முடி கழுவுவதற்கு சீயக்காயை பயன்படுத்துவதற்கான சரியான முறைகள் குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Shikakai Benefits: தலைமுடி பிரச்சனைக்கு முடிவுகட்ட சீயக்காயுடன் இந்த 4 பொருட்களை கலந்து பயன்படுத்துங்க!
முடியைக் கழுவுவதற்கு சீயக்காய் பயன்படுத்துவது எப்படி?
தலைமுடியைக் கழுவ சீயக்காய் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதற்கு சீயக்காயை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான குறிப்புகளைக் காணலாம்.
தேவையான பொருள்களை சேகரிப்பது
தலைமுடியைக் கழுவுவதற்கு சீயக்காயைப் பயன்படுத்துவதற்கு முதலில் தேவையான பொருட்களை சேகரிக்க வேண்டும். இதற்கு, முடியின் நீளத்திற்கு ஏற்ப 2 முதல் 4 தேக்கரண்டி சீயக்காய் பொடியை எடுத்துக் கொள்ளலாம். 1 தேக்கரண்டி அளவு ரீத்தா பவுடர் மற்றும் 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை எடுத்து தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்ட் தயார் செய்வது
அதன் பின்னர் சீயக்காய் பேஸ்ட் அல்லது டிகாஷன் தயார் செய்யலாம்.
சீயக்காய் பேஸ்ட் தயார் செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் சீயக்காய், ரீத்தா மற்றும் நெல்லிக்காய் பொடியை கலக்க வேண்டும். இப்போது அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மெல்லிய பேஸ்ட் செய்யலாம். இந்த பேஸ்ட்டை அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைக்க வேண்டும்.
சீயக்காய் டிகாஷன் தயார் செய்ய, 2-3 தேக்கரண்டி முழு சீயக்காய், ரீத்தா மற்றும் நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கலாம். பின்னர் மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து, ஆறிய பிறகு மசித்து வடிகட்டி வைக்கலாம். இப்போது தலைமுடியைக் கழுவத் தேவையான டிகாஷன் தயாராக உள்ளது.
முடியைக் கழுவும் முறை
தலைமுடியை சீயக்காய் கொண்டு கழுவுவதற்கு, முதலில் தலைமுடியை வெற்று நீரில் நனைக்கலாம். இப்போது சீயக்காய் பேஸ்ட் அல்லது டிகாக்ஷனை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் நன்கு தடவ வேண்டும். பிறகு, விரல்களால் உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம், உச்சந்தலையில் உள்ள அழுக்குகள் நீங்கும். அதன் பின்னர் தலைமுடியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். பின்னர், தலைமுடியை வெற்று நீரில் நன்கு கழுவலாம். தேவைப்பட்டால், அதே செயல்முறையை மீண்டும் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Reetha Shikakai: நரைமுடி கருப்பாக மாற ஆம்லா ரீத்தா சீகக்காயை இப்படி பயன்படுத்துங்க
தலைமுடிக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆயுர்வேதத்தில், தலைமுடிக்கு சீயக்காய் பயன்படுத்துவது முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. இதைக் கூந்தலுக்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
- சீயக்காய் கொண்டு தலைமுடியைக் கழுவுவது முடியை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இதில் எந்த ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை.
- சீயக்காயில் உள்ள பண்புகள் முடி உதிர்தல் பிரச்சனையைத் தடுக்கவும், வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.
- சீயக்காய் கொண்டு தலைமுடியை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் பொடுகு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
- சீயக்காயைப் பயன்படுத்துவது இயற்கையாகவே தலைமுடியின் பளபளப்பை அதிகரித்து மென்மையாக்குகிறது.
- சீயக்காய் கொண்டு உங்கள் தலைமுடியை தொடர்ந்து அலசுவது உச்சந்தலையை ஆற்ற உதவுகிறது. இதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பை நீக்கலாம்.
சீயக்காயை தலைமுடிக்கு தடவும்போது மனதில் கொள்ள விஷயங்கள்
- சீயக்காய் பயன்படுத்தும் போது நுரை மிகவும் குறைவாகவே வருகிறது. எனவே அதிக நுரை வர அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- தலைமுடி மிகவும் வறண்டிருந்தால், சீயக்காய்க்குப் பிறகு சிறிது எண்ணெய் அல்லது இயற்கை கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்.
- தலைமுடியைக் கழுவும்போது, அது கண்களுக்குள் செல்லாமல் இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது லேசான கூச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
முடிவுரை
சீயக்காய் ஆனது தலைமுடியை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு மலிவான, இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். ரசாயன ஷாம்புகளால் சோர்வடைந்து, இயற்கையான ஒன்றைப் பயன்படுத்த விரும்பினால், வீட்டிலேயே முடி கழுவுவதற்கு சீயக்காயைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Shikakai Hair Mask: இந்த ஒரு ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க, முடி பிரச்சனை எல்லாம் காணாம போய்டும்
Image Source: Freepik