தலைமுடி கருமையாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. இதற்காக வேதிப்பொருள்கள் கலந்த ஷாம்பூ பயன்படுத்துவது, எண்ணெய் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு வேதிப்பொருள்கள் கலந்தவற்றைப் பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு தீர்வாக, வீட்டிலேயே சில எளிய முறைகளைப் பயன்படுத்தி இயற்கையான பொருள்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்து இதில் காணலாம்.
முடி வளர வீட்டிலேயே தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள், எந்த பக்க விளைவுகளையும் கொடுப்பதில்லை. அதே சமயம், நீண்ட காலத்திற்கு உதவக்கூடியதாகவும் அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
லாவண்டர் எண்ணெயில் வெங்காயம்
வெங்காயம் மற்றும் லாவண்டர் எண்ணெய் இரண்டும் தனித்தனியாக தலைமுடிக்கு ஆரோக்கியம் தருவதாக அமைகிறது. இவை முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துகின்றன. வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். இதில் லாவண்டர் எண்ணெயுடன் வெங்காயம் கலப்பதால் கிடைக்கும் பண்புகளைக் காணலாம்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில், தேவையான அளவு வெங்காயத்தை எடுத்துக் கொண்டு வெங்காயச் சாறாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், சம அளவிலான தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு ஷாம்பூ பயன்படுத்தி கழுவி விட வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை தனித்தனியே முறையே தலைமுடிக்கு நன்மை தருவதாக அமைகின்றன. இவை இரண்டையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணெய் ஆனது, முடியில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், முடி நரைப்பதை முன்கூட்டியேக் குறைப்பதில் கறிவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் அடர்த்தியான மற்றும் கருமையான முடியைப் பெறலாம்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, சூரிய வெப்பத்தில் நன்கு உலர வைக்க வேண்டும். பிறகு, இவற்றை 100மிலி தேங்காய் எண்ணெயில் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இது குளிர்ந்த பிறகு, வடிகட்டி தலையில் தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி
செம்பருத்தி பூக்கள் பொதுவாகவே முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது. இது முடி நரைப்பதை தாமதப்படுத்துவதுடன், அடர்த்தியாக வளரவும் உதவுகிறது. இதில், தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தியைக் கலந்து எண்ணெய் தயாரிப்பது குறித்துக் காணலாம்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
செம்பருத்தி பூக்களை வெயிலில் நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் உலர்ந்த செம்பருத்தி பூக்கள் சேர்க்கப்பட்டு, இதன் கலவையை மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். பிறகு, இதை குளிரவைத்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சூடாக்க வேண்டும்.
பாதாம் எண்ணெயில் வேம்பு இலைகள் சேர்த்தல்
வேப்பம்பூவில் உள்ள கசப்புத் தன்மை முடியில் பொடுகு அனைத்தையும் நீக்கி பாதுகாப்பான, ஆரோக்கியமான முடியைத் தருகிறது. இதில், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
வேப்ப இலைகளைக் காய வைத்து, பின் பாதாம் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, இந்த கலவையை ஒரு வாரம் அப்படியே வைத்து பிறகு வடிகட்டி உபயோகிக்கலாம். ஒரு வாரத்திற்கு பின், எண்ணெய் ஆனது பச்சை நிறமாக மாறும். இது, வேப்ப இலைகள் நன்கு எண்ணெயில் கலந்திருப்பதைக் காட்டுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
Image Source: Freepik