$
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இன்று எல்லாருடைய கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை ஸ்மார்ட் போன் பயன்பாடு மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெற்றாலும், அதே அளவிற்கு தீமைகளும் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக திருமண வீடு முதல் துக்க வீடு வரை தற்போது செல்ஃபி எடுக்கும் வழக்கம் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருகிறது. நன்றாக டிரஸ் செய்து கண்ணாடி முன்னாடி நின்றாலே போதும் கை ஆட்டோமெட்டிக்காக செல்ஃபி பட்டனை தட்ட ஆரம்பித்துவிடுகிறது. “நம்பள நம்பளே போட்டோ எடுத்து ரசிச்சிக்கிட்டால் தன்னம்பிக்கை தானே வளரும், இதில் என்ன தவறிருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்?”.

உண்மையில், அளவுக்கு அதிகமாக செல்ஃபி எடுப்பது “செல்ஃபி சின்ட்ரோம்” என்ற நோய்க்கு வழிவகுக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்ஃபி சிண்ட்ரோம் என்றால் என்ன?
செல்ஃபி எடுப்பதை சாதாரணமாக விஷயமாக கடந்து செல்லாமல், அதையே வாழ்க்கை போல பார்ப்பது செல்ஃபி சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. அதாவது செல்ஃபி எடுத்து முடித்த உடனேயே, அதனை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துவிட்டு கமெண்ட் மற்றும் லைக்குகளுக்காக காத்திருப்பார்கள். நிபுணர்கள் இந்த பிரச்சனைக்கு செல்ஃபிடிஸ் கோளாறு என்றும் அழைக்கின்றனர்.
இது செல்ஃபி மீதான தீவிரத்தை பொறுத்து, பார்டர்லைன் செல்ஃபிடிஸ், கடுமையான செல்ஃபிடிஸ் மற்றும் நாட்பட்ட செல்ஃபிடிஸ் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பார்டர்லைன் செல்ஃபிடிஸ் - இது செல்ஃபி சிண்ட்ரோமின் ஆரம்ப நிலை. இந்த நிலையில் அடிக்கடி செல்ஃபி எடுத்து பதிவிடும் பழக்கம் தீவிரமாக இருக்காது.
கடுமையான செல்ஃபிடிஸ் - இந்த கட்டத்தில் செல்ஃபிக்கு அடிமையாவதோடு, போட்டோக்களை சோசியல் மீடியாவில் போட்டோவை உடனடியாக பதிவிடும் ஆர்வமும் அதிக அளவில் இருக்கும்.
நாள்பட்ட செல்ஃபிடிஸ் - மீண்டும் மீண்டும் புகைப்படம் எடுப்பது, இடத்தை மாற்றி, மாற்றி எடுப்பது, எளிதில் திருப்தி அடையாமல் இருப்பதும் இந்தப் பிரச்சனையின் அறிகுறிகளாகும். இந்த கட்டத்தில், செல்ஃபி எடுப்பதையே நாளின் பெரும்பகுதி வேலையாக எடுத்துக்கொள்வார்கள்.
அடிக்கடி செல்ஃபி எடுத்து பதிவிடுவது ஒரு பழக்கமாகிவிடுவதோடு, கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளுக்காக காத்திருப்பதும், அடிக்கடி செக் செய்வதும் வழக்கமாக மாறியிருக்கும்.
செல்ஃபி சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது?
நிபுணர்களின் கூற்றுப்படி, செல்ஃபி எடுப்பதற்கான இந்த அடிமைத்தனம் வெறித்தனமான கட்டாய ஈடுபாட்டிலிருந்து உருவாகிறது. பல சந்தர்ப்பங்களில், வாழ்க்கையில் போதுமான திருப்தி இல்லாவிட்டாலும், பலர் தங்களைத் தாங்களே கொண்டாட முடிவெடுக்கிறார்கள். அப்போது எளிதான வழியாக செல்ஃபி அமைகிறது. இது செல்ஃபி சிண்ட்ரோம் என்ற நிலைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

செல்ஃபி சிண்ட்ரோம் நோய்க்கான தீர்வு என்ன?
நிபுணர்களின் கூற்றுப்படி, செல்ஃபி எடுக்கும் பழக்கம் அடிமையாகும் நிலையை எட்டியுள்ளது. இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது. தொழில்முறை உளவியல் நிபுணர்களிடம் முறையான கவுன்சிலிங் பெற்று, செல்ஃபி அடிக்ஷனில் இருந்து வெளிவருவது மட்டுமே இதற்கான தீர்வாகும்.