குழந்தை பருவ நோய்த்தொற்றாகக் கருதப்படும், தட்டம்மை என்பது Paramyxovirus குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படுகிறது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இது கொடிய நோயாக இருந்தபோதிலும், தேவையான தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் இன்றைய காலகட்டத்தில் இதனை தடுக்க முடியும் என்று மும்பை வாஷியில் உள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தனி மருத்துவமனையின் உள்-மருத்துவர் இயக்குநர், மருத்துவர் ஃபரா இங்கேல் தெரிவித்தார்.
தட்டம்மை என்றால் என்ன?
தட்டம்மை, ரூபியோலா என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரியவர்களுக்கு ஆபத்தானது என்றாலும், சிறு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. 2016 முதல், உலகளாவிய தட்டம்மை விகிதம் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது. மேலும் 2019-ல் இது, 2,07,500 உயிர்களைக் கொன்றுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், தட்டம்மை சுமார் 10 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 முதல் 2,00,000 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆம் நூற்றாண்டில் பாரசீக மருத்துவர் ரேஸஸ் இந்த நோயை "பெரியம்மை நோயை விட மிகவும் பயப்படக்கூடியது" என்று விவரித்தார்.
தட்டம்மையின் அறிகுறிகள்
தட்டம்மையின் அறிகுறிகள் 10-14 நாட்களுக்குப் பிறகே தோன்றத் தொடங்குகின்றன. காய்ச்சல், வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், வீக்கமடைந்த கண்கள், வாயின் உள்ளே சிறிய வெள்ளை புள்ளிகள் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை தட்டம்மையின் சில பொதுவான அறிகுறிகளாகும்.
தட்டம்மை ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தும். மிகவும் கடுமையான சிக்கல்களில் குருட்டுத்தன்மை, மூளையழற்சி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் தொடர்புடைய நீரிழப்பு, காது நோய்த்தொற்றுகள் அல்லது நிமோனியா போன்ற கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடைய உங்கள் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய ஐந்து உணவுகள்
தட்டம்மை ஏற்படும் காரணங்கள்

தட்டம்மை பரவக்கூடிய நோயாகும். இது ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும். குறிப்பாக வீடற்ற குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கடுமையான தட்டம்மை பரவும் விகிதம் அதிகமாக உள்ளது. கூடுதலாக, குழந்தைகளுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால், அவர்களுக்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
தட்டம்மை தடுப்பூசி அவசியம்
தட்டம்மை நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசியை எடுத்துக்கொள்வதாகும், ஏனெனில் இது தொற்றுநோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. 2017 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளில் சுமார் 85% பேர் தங்களின் முதல் பிறந்தநாளில் ஒரு டோஸ் தட்டம்மையைப் பெற்றுள்ளனர், மேலும் 67% பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர். உலகெங்கிலும் 2000 மற்றும் 2017 க்கு இடையில் தட்டம்மை இறப்புகளில் கிட்டத்தட்ட 80% கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, இந்த பயங்கரமான நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது.
இந்தியாவில், தட்டம்மை நோய்த்தடுப்பு விழிப்புணர்வை கொண்ட மாநிலங்கள், நோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை திறம்பட குறைத்துள்ளன. இந்தியாவில் இறப்புகளைக் குறைப்பதில் இரண்டு டோஸ் தட்டம்மை தடுப்பூசி விகிதத்தை அதிகரிக்கவும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஊக்குவிக்கவும். தட்டம்மை நோய்த்தடுப்பு மருந்தைப் பெறாத சிறு குழந்தைகள், தட்டம்மை மற்றும் இறப்பு உட்பட அதன் சிக்கல்களின் அதிக ஆபத்தில் உள்ளனர்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ, தட்டம்மை அறிகுறிகள் தென்பட்டால், விரைவில் ஒரு சுகாதார நிபுணரைத் தொடர்புகொள்வது அவசியம். தட்டம்மைக்கான முன்கணிப்பைப் பெற, உங்கள் மருத்துவர் உங்கள் இரத்தம், மூக்கு, தொண்டை மற்றும் சிறுநீர் ஆகியவற்றைப் பரிசோதிக்கச் சொல்வார். உங்கள் பிள்ளைக்கு தட்டம்மை இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.
Image Source: Freepik