$
Cancer Types And Its Symptoms: அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் மோசமான உணவு முறை காரணமாக பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்றாக புற்றுநோயும் உள்ளது. புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே, அனைவருக்கும் நினைவில் வருவது ஒரு ஆபத்தான நோய் என்பது தான். இந்த புற்றுநோய் வளர்ச்சியடைந்து உயிர் வாழும் விகிதத்தைக் குறைக்கலாம்.
எனினும், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகம் வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்படுமாயின் அவை சிகிச்சையளிக்கப்பட கூடியவகையாகவே அமைகிறது. எனவே, புற்றுநோய் தீவிர நிலையை அடையும் முன் கண்டறிந்து புற்றுநோயின் வகைக்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து விடுபட முடியும். இதில் புற்றுநோயின் வகைகள் மற்றும் அதன் பொதுவான சில அறிகுறிகள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Cancer Prevention: தோல் புற்றுநோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.
புற்றுநோய் வகைகள்
உடலில் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படும் நோய்களின் குழுவே புற்றுநோய் ஆகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளது. இவை உடலின் அல்லது உறுப்பின் எந்தப் பகுதியில் உருவாகிறதோ அந்த பகுதியின் பெயரை வைத்து அழைக்கப்படுகிறது. இதில் சில புற்றுநோய்களின் வகைகளைக் காணலாம்.
- நுரையீரல் புற்றுநோய்
- பெருங்குடல் புற்றுநோய்
- கல்லீரல் புற்றுநோய்
- மார்பக புற்றுநோய்
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
- வயிறு புற்றுநோய்
- சிறுநீரக புற்றுநோய்
- இரத்த புற்றுநோய்
- தோல் புற்றுநோய்
- கருப்பை புற்றுநோய்
- புரோஸ்டேட் புற்றுநோய்
- சிறுநீர்ப்பை புற்றுநோய்
- கணைய புற்றுநோய்
- குழந்தை பருவ புற்றுநோய்
இது தவிர, இன்னும் சில புற்றுநோய் வகைகள் உள்ளன. இந்த புற்றுநோய் வகைகளின் அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிவதன் மூலம் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்
சில சமயங்களில் சிறிய அறிகுறிகளும் புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் மட்டுமே உடலில் புற்றுநோய் பரவலைத் தடுக்க முடியும். இதில் புற்றுநோய் ஏற்படும் போது அதை வெளிக்காட்டும் சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம்.
வீக்கம் அல்லது கட்டி ஏற்படுதல்
உடலில் ஏதாவது ஒரு பகுதியில் கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால், சாதாரணமாக நினைத்து விட்டு விடாதீர்கள். இவை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் வயிறு, மார்பகம் போன்ற இடங்களில் ஏற்படும் வீக்கம் போன்றவை புற்றுநோய்க்கான காரணமாக இருக்க்லாம். இவை நீண்ட நாள்களுக்கு இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மச்சம் அல்லது மருவில் மாற்றம்
உடலில் மச்சம் அல்லது மருவில் ஏதேனும் மாற்றம் ஏற்படின், அதை புறக்கணிக்காமல் இருப்பது நல்லது. பெரும்பாலானோர் இதைக் கவனிப்பதில்லை. ஆனால் இது தோல் புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சருமத்தில் புதிய மரு அல்லது மச்சம் தோன்றும் போது சருமத்தில் ஏற்கனவே உள்ள மச்சத்தின் நிறம் மாறுதல் அல்லது அளவு அதிகரித்தல் போன்றவற்றைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Symptoms of Cervical Cancer: கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!
எடை குறைவது
வழக்கத்திற்கு மாறாக, மிகவும் வேகமாக உடல் எடை குறைவதும் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதிலும், எந்த விதை உடல் எடை குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், எடை குறைவது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். மேலும் வயிறு, கணையம், நுரையீரல் அல்லது உணவுக்குழாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் உருவாவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

தொடர் இருமல்
தொடர்ச்சியான இருமல் பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது. மார்பில் அதிக சளி இருப்பதும் தொடர் இருமலுக்குக் காரணமாகலாம். ஆனால், தொடர்ந்து அதாவது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு இருமல் பிரச்சனை இருப்பின், இது மோசமான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம், மற்றும் சளியுடன் இரத்தம் வருவது போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரில் இரத்தம்
சிறுநீர் வழியாக இரத்தம் வெளியேறுதல் அறிகுறியானது குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். வழக்கத்தை விட அதிகம் கழிப்பறைக்குச் சென்றாலோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையத் தொடர்ந்து எதிர்கொண்டாலோ இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. இது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இது தவிர தொடர்ந்து நெஞ்செரிச்சல், உடல் வலி, உணவை விழுங்குவதில் சிரமம், இரவில் அதிகம் வியர்ப்பது போன்றவையும் அடங்கும். இந்த அறிகுறிகள் எப்போதும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரிய சந்தர்ப்பங்களில் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருப்பதால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்
Image Source: Freepik