கோடை காலத்தில் கூந்தல் வறட்சி என்பது பலர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. வெப்பம், சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தாக்கம், வியர்வை காரணமாக முடியில் வழக்கை விட அதிகமாக பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இதனால் கூந்தல் இயற்கையான பளபளப்பை இழப்பதோடு, நுனியில் பிளவு, முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது.

போதாக்குறைக்கு இயற்கையாகவே வறண்ட கூந்தலைக் கொண்டவர்கள், கோடையில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில இயற்கை பொருட்களை பயன்படுத்துவதம் மூலமாக உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பட்டுப் போலவும் வைத்திருக்கலாம். அவை என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
வாழைப்பழம்:
வறண்ட தலைமுடிக்கு புத்துயிர் தர நன்கு பழுத்த வாழைப்பழம் போதும். பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பு மற்றும் கன்டிஷனர் போட்டு தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் கூந்தல் பட்டுபோல் பளபளப்பதை கண்கூடாகக் காணலாம்.
முட்டை வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கருவுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, பாதாம் பவுடர் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மென்மையான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இதை நுனி முதல் முனை வரை தடவி அரை மணி நேரம் காத்திருந்து மைல்ட் ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள். கூந்தல் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
பூசணிக்காய்:
பூசணிக்காய் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உடன், பீட்டா கரோட்டின், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பேஸ்ட் செய்யப்பட்ட பூசணிக்காயுடன், இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் இருந்து நுனி வரை தடவி 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு தலையைக் கழுவி, நல்ல கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கின் மூலம், சுருட்டை முடி கூட மென்மையாகவும் பட்டுப் போலவும் மாறும்.
வெந்தயம்:
இரண்டு டீஸ்பூன் வெந்தய பவுடருடன் நான்கு டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும். இதை உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், உங்கள் கூந்தல் மென்மையானதாக மாறும்.
அரிசி கஞ்சி:
கஞ்சியில் வைட்டமின் பி, ஈ மற்றும் சி உள்ளது. அவை கூந்தலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அரிசி கஞ்சியுடன் சிறிது மோர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் உலர விடவும்.
பின்னர் ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், நுண் மயிர்கால்கள் வலுப்பெறும். இதில் உள்ள அமினோ அமிலங்கள், கூந்தலுக்கு தேவையான பளபளப்பை வழங்கும்.
Image Source:Freepik