$
சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆண்கள், பெண்கள் என அனைவரும் எண்ணக் கூடிய ஒன்றாகும். இதனால், பலரும் சருமத்தை ஒளிரச் செய்யக்கூடிய தயாரிப்புகளை முயற்சி செய்கின்றனர். ஆனால், உடனடியாகப் பயன்தரக்கூடிய எந்த ஒரு தயாரிப்பும், விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இந்த சரும பராமரிப்பிற்கு சிறந்த வழி என்பது தோல் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதும், இயற்கை முறைகளைக் கையாள்வதும் ஆகும். குறிப்பாக, முகத்தில் தோன்றும் சிறு கரும்புள்ளிகளுக்கு வேதிப்பொருள்கள் உள்ளடக்கிய கிரீம்களைப் பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும். கரும்புள்ளிகளை இயற்கையாக எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இதில் காண்போம்.
சருமத்தை ஒளிரச் செய்யும் தயாரிப்புகள்

நிறத்தை சீரற்றதாக மாற்றுவதில், சிறு கரும்புள்ளிகளும் காரணமாக அமைகிறது. வடுக்கள் தோன்றுதல், கரும்புள்ளிகள் தோன்றுதல் போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் சருமத்தை ஒளிரச்செய்யக் கூடிய பொருள்கள் முயற்சிக்கப்படுகின்றன. சந்தையில் பல்வேறு சருமத்தை ஒளிரச்செய்யக்கூடிய பொருள்கள் இருப்பினும், அவை அனைத்தும் சமமாக உருவாக்கப்பட்டவை அல்ல. இதில், சில ஆபத்துகளும் நிறைந்திருக்கலாம்.
கரும்புள்ளிகள் வரக்காரணம்

கரும்புள்ளிகள் அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷன் கீழே கொடுக்கப்பட்ட சில காரணங்களால் உருவாகிறது.
தோலில் ஏற்படும் அழற்சி காரணமாக காயங்கள் ஏற்பட்டு, அது கரும்புள்ளிகளாக மாறிவிடும்.
நேரடி சூரிய ஒளியில் உண்டாகக் கூடிய மெலனின் உற்பத்தி அதிகரிப்பால், தோல் கருமையான நிறத்திற்கு வழிவகுக்கும்.
ஹார்மோன் சமநிலையின்மையும் கரும்புள்ளிகள் உண்டாவதற்கான வாய்ப்பாக அமைகிறது.
கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்
முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில எளிய மற்றும் இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் நீக்கலாம். இந்த சிகிச்சை முறைகளில் சில உடனடி பலன்கள் கொடுக்காத போதிலும், பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.
கற்றாழை
அலோவேரா எனப்படக்கூடிய கற்றாழை சரும பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வாகும். இது இயற்கையாகவே கிடைக்கப்பெறுவதுடன், இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் முகத்திற்கு பிரகாசத்தையும், கரும்புள்ளிகளை நீக்கவும் உதவுகிறது. கற்றாழை சாற்றை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளில் தடவி, 20-30 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
வெள்ளரி
வெள்ளரிக்காயில் வைட்டமின்கள், சிலிக்கா நிறைந்த கலவை, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை இருப்பதால், வெள்ளரி கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. சில வெள்ளரிகளை எடுத்துக் கலக்கி அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் வரை விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

தயிர்
வெண்மையான தயிர், இயற்கையாகவே பிரகாசத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். தோலுரிப்பு மூலம் உண்டான கரும்புள்ளிகளை நீக்குவதற்கு தயிர் உதவுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம், நிறமாற்றத்திற்கு உதவுகிறது. மற்ற பிற குணப்படுத்தும் பொருள்களான மஞ்சள் அல்லது ஓட்மீல் உடன் பயன்படுத்தலாம். பருத்தி பஞ்சை உபயோகப்படுத்தி கரும்புள்ளிகள் மீது தயிர் தடவலாம். இவ்வாறு 15-20 நிமிடங்கள் விட்டு, பின் அதை கழுவலாம்.
சிவப்பு பருப்பு
மைசூர் பருப்பு எனப்படும் சிவப்பு பருப்பு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுகிறது. இதற்கு, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே முக்கிய காரணமாகும்.
சில சிவப்பு பருப்புகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். பின் அதை பேஸ்ட் செய்து முகத்தில் 20 நிமிடங்கள் வரை வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

மஞ்சள்
கிருமி நாசினியாக விளங்கும் பஞ்சள் தோல் பராமரிப்பு முறைக்கும் இன்றியமையாததாகும். இதில் குர்குமின் இருப்பதால், சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது கரும்புள்ளிகளை மறைத்து சருமத்தை ஒளிரச்செய்கிறது. மஞ்சளை தண்ணீரில் நன்றாக கலந்து காட்டன் பேட் மூலம் முகத்தில் தடவி 20-30 நிமிடங்களுக்கு வைத்து பின் தண்ணீரில் கழுவலாம்.
இந்த முறைகள் இயற்கையாக கரும்புள்ளிகளை நீக்குவதற்கான முறைகளாகும். இருப்பினும், உடல்நிலைக்குத் தகுந்தாற்போல மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.
Image Source: Freepik