PM Manmohan Singh Dead: 92 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். CRPF குழு ஒன்று மன்மோகன் சிங்கை இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தது, அப்போது அவருடைய மகளும் உடன் இருந்ததாக கூறப்பட்டது.
மன்மோகன் சிங் மரணத்திற்கான காரணம்
கடந்த சில வருடங்களாக பலமுறை உடல்நலம் குறித்த கவலைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். அதோடு அவருக்கு பைபாஸ்கள் உட்பட, இதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டென்டிங் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டெல்லி AIIMS மருத்துவமனை
இதுகுறித்து டிசம்பர் 26 AIIMS தரப்பில் வெளியானதாக கூறப்படும் தகவலின்படி, "வயது தொடர்பான மருத்துவ நிலைமைகளுக்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் திடீரென அவர் வீட்டிலேயே சுயநினைவை இழந்து மயங்கியுள்ளார்.
உடனடியாக வீட்டில் புத்துயிர் அளிக்கும் முதலுதவி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மருத்துவ அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை, இதைத் தொடர்ந்து இரவு 9.51 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என கூறப்படுகிறது.
மன்மோகன் சிங் வகித்த பதவிகள்
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி, இதுவரை இருந்த நிதியமைச்சர்களில் ஆகச்சிறந்த ஒருவர், முன்னாள் பிரதமர் என தேசத்தின் பல உயர் பொறுப்பில் இருந்து நாட்டின் வளர்ச்சில் பல முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
7 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 7 நாட்கள் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.