முடி வளர்ச்சிக்காக கூந்தலில் கண்டதையும் பூசி பரிசோதனை செய்வதை விட ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சில உணவுகள் உள்ளன. இலை கீரைகள் இதில் முக்கியமானவை. இலைக் காய்கறிகளில் முருங்கை இலைகள் முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லது. இதற்கு முருங்கை இலைகள் மட்டுமின்றி முருங்கை காய் மற்றும் முருங்கை பூக்களும் நன்மை தரும்.
முருங்கையின் ஆரோக்கிய நன்மைகள்:
முருங்கைக்காயில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முருங்கை இலைகளைப் போலவே முருங்கைப் பூவும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கூந்தலின் ஆரோக்கியத்திற்கு உதவும் முருங்கைப் பூவைக் கொண்டு கூந்தலை பராமரிப்பதற்கான டாப் 5 வழிகள் குறித்து பார்க்கலாம்...
1. முருங்கை பூ எண்ணெய்:
இந்த எண்ணெயானது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் புரதம், நிறைவுற்ற கொழுப்பு, டோக்கோபெரால் மற்றும் ஸ்டெரால் என பலவித ஊட்டச்சத்து கலவைகளை உள்ளடக்கியுள்ளது.
எப்படி தயாரிப்பது?
- ஒரு கைப்பிடி முருங்கை பூவை எடுத்து நிழலில் காயவைக்கவும்.
- 1 கப் தேங்காய் எண்ணெய் (அல்லது குங்குமாதி எண்ணெய்) சேர்த்து, ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும்.
- பூக்கள் நன்றாக வெந்ததும், மிதமான சூட்டில் 5-10 நிமிடம் வைத்துவிட்டு, வடிகட்டவும்.
எப்படி பயன்படுத்தலாம்?
- இந்த எண்ணெயை தலைக்கு தடவி 30-40 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவலாம்.
- வாரத்தில் 2 முறை செய்யலாம்.
2. முருங்கை பூ & வெந்தயம் முடி பேக்:
வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. இவை முடி வளர்ச்சிக்குத் தேவையானவை. எனவே, முடி உதிர்தலுக்கு வெந்தயத்தைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தயம் ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் போன்ற தாவர கலவைகளின் நல்ல மூலமாகும். ஃபிளாவனாய்டுகள், சபோனின்கள் பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக அவை முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. வெந்தயத்தில் நிகோடினிக் அமிலமும் உள்ளது. இது புரதத்துடன் சேர்ந்து, முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும். இது வறட்சி போன்ற உச்சந்தலையின் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
எப்படி தயாரிப்பது?
- ஒரு கைப்பிடி முருங்கை பூ, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும்.
- தேவையான அளவு தயிர் அல்லது தேங்காய் பால் சேர்க்கலாம்.
எப்படி பயன்படுத்தலாம்?
- தலைமுடி அடிப்பகுதியில் தடவி 30-40 நிமிடங்கள் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசவும்.
- வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
3. முருங்கை பூ & கறிவேப்பிலை ஹேர் டோனிக்:
கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துகள் கண் பார்வை குறைபாட்டிற்கு உதவுகின்றன. மேலும் இவை கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதற்கு கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதமே காரணமாகும். இவை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தலுக்கு ஈரப்பதத்தைத் தருகிறது.
எப்படி தயாரிப்பது?
முருங்கை பூ, கறிவேப்பிலை, திரிஃபலா சேர்த்து நீரில் வேகவைத்து, வடிகட்டி குளிர வைக்கவும்.
எப்படி பயன்படுத்தலாம்?
- இதை வாரம் இருமுறை தலைமுடிக்கு ஸ்ப்ரே செய்யலாம் அல்லது தேய்த்து பயன்படுத்தலாம்.
- இது தலைமுடி வளர்ச்சியை தூண்டி, முடி அடர்த்தியாக வளர உதவும்.
4. முருங்கை பூ & நெல்லிக்காய் ஹேர் வாஷ்:
நெல்லிக்காயில் பல ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோநியூட்ரியன்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இந்த பண்புகள் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நெல்லிக்காயை சாப்பிடுவதால் மயிர்க்கால்கள் அதிகரித்து முடி உதிர்வது குறையும். பொடுகை குறைக்க உதவும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.
எப்படி தயாரிப்பது?
ஒரு கைப்பிடி முருங்கை பூ, 2-3 நெல்லிக்காய் துண்டு, சிறிது துளசி இலை சேர்த்து நீரில் வேகவைத்து வடிகட்டவும்.
எப்படி பயன்படுத்தலாம்?
- இதை ஷாம்பூ போல முடியை கழுவும் போது பயன்படுத்தலாம்.
- இது தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளித்து உதிர்வை குறைக்கும்.
5. முருங்கை பூ & தேன் ஹேர் மாஸ்க்:
தேன் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு இயற்கையான மூலப்பொருள். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், என்சைம்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தேன் முடிக்கு பல நன்மைகளைத் தருகிறது. இது முடி உதிர்வைக் குறைப்பதோடு, அடர்த்தியாகவும், மென்மையாகவும் முடி வளர உதவுகிறது.
எப்படி தயாரிப்பது?
முருங்கை பூவை அரைத்து, அதில் தேன் மற்றும் அலோவேரா ஜெல் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்யவும்.
எப்படி பயன்படுத்தலாம்?
- இந்த பேஸ்டை தலைமுடியில் 30 நிமிடங்கள் வைத்துவிட்டு அலசலாம்.
- இது தலைமுடிக்கு ஈரப்பதம் சேர்த்து உதிர்வை குறைக்கும்.
Image Source: Freepik