$
Baby Nose Massage: புதிதாகப் பிறந்த சில குழந்தைகளின் மூக்கின் வடிவம் ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும், பெற்றோர்கள் சில சமயங்களில் பதற்றமடைகிறார்கள். இதன் காரணமாக, பழைய பாட்டியின் செய்முறையை ஏற்று, மூக்கை மசாஜ் செய்து அதை வடிவத்துக்கு கொண்டு வருகிறார்கள்.
மூக்கை மசாஜ் செய்வது மூக்கின் வடிவத்தை மாற்றுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். இது உண்மை தானா? குழந்தையின் மூக்கை மசாஜ் செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்து பார்க்கலாம்.
குழந்தையின் மூக்கை மசாஜ் செய்வது நல்லதா?
குழந்தைகள் பிறந்த உடன் அவர்களது மூக்கை குளிக்க ஊற்றும் போதும் பிற நேரங்களிலும் மசாஜ் செய்வது உண்டு. இதனால் மாற்றங்களை சந்தித்ததாக கூறப்படும் பலரும் உண்டு. உறுதிப்பட தெரிவிப்பவர்கள் பலரையும் நாம் அறிவோம். ஆனால் முறையின்றி பாதுகாப்பின்றி எதை செய்தாலும் ஆபத்து தான்.
குழந்தையின் மூக்கை வடிவமைக்க மசாஜ் செய்வது பாதுகாப்பானதா?
சமூக ஊடகங்களில் டாக்டர் ஹைஃபைவ் என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சயீத் முஜாஹித் ஹுசைன் இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம். தான் ஒருமுறை பெற்றோரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் தனது குழந்தையின் மூக்கில் அழுத்தம் கொடுத்து தடவிக் கொண்டே இருந்தார். ஏன் என்று தான் கேட்டேன்.

அதற்கு இப்படி செய்தால் குழந்தையின் மூக்கு அழகாக தோற்றமளிக்கும் நடிகர்கள் போல் இருக்கும் என்று கூறினார், இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன் என கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.
குழந்தையின் மூக்கு, அதன் வடிவம், உயரம் உள்ளிட்டவை அவரது மரபணுவைப் பொறுத்தது. அதாவது குழந்தையின் உடல் உறுப்புகள் அதன் பெற்றோரின் உறுப்புகளைப் போலவே இருக்கும். மூக்கை மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையின் மூக்கு வித்தியாசமான வடிவத்தைப் பெறுகிறது, இது எதிர்காலத்தில் அவரது மூக்கை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றும் என்று சிலர் நம்புகிறார்கள்.
மூக்கின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுமா?
மருத்துவரின் கூற்றுப்படி, குழந்தையின் மூக்கை எவ்வளவு மசாஜ் செய்தாலும் மூக்கின் வடிவத்தை மாற்ற முடியாது. மூக்கின் வடிவத்தை மாற்ற ஒரே வழி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தான். ஆனால் அதுவும் தேவையற்றதே. குழந்தைகளை தங்கள் போக்கில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து இயற்கையாக வளரவிடுங்கள்.
மூக்கின் வடிவம் தானாகவே மாறுமா?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் மூக்கின் வடிவம் சாதாரணத்திலிருந்து வேறுபட்டால், எதிர்காலத்தில் அவரது மூக்கின் வடிவம் தானாகவே சரியான வடிவத்தை எடுக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகும் மூக்கின் வடிவம் சரியாக இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால், அது கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். இதற்கு, கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். அதுவே சரியான முடிவாக இருக்கும்.
குழந்தைகள் விஷயத்திலும் கர்ப்ப காலத்திலும் சமரசம் என்பதே வேண்டாம். ஏதேனும் அசௌகரியத்தையே தீவிரத்தையோ உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Pic Courtesy: FreePik