கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்களில் போடப்படும் மேக் அப்பால் நிரந்தரமாக கண்கள் பறிபோகும் ஆபத்து உள்ளது என்பது யாருக்கும் தெரியாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் அழகு சாதனப்பொருட்களான மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். மேக் அப் சாதனங்களை வாங்கும் போது தரக்கட்டுப்பாடு, பரிசோதனை போன்றவை செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். பழைய அழகு சாதனப்பொருட்கள் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். ஆனால் பலரும் இதையெல்லாம் செய்வதில்லை. விளைவு மேக் அப் சாதனங்களால் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதே போல் காம்பாக்ட் ஸ்பான்ச், ஐ லைனர், மஸ்கரா ப்ரஸ், போன்றவற்றை ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள தோலை பாதிக்கிறது.
கண்களுக்கு போடப்படும் மேக் அப்களில் கெமிக்கல் பாதிப்பு அதிகளவில் இல்லாத க்ரீம்கள் என்ற பெயரில் கிடைக்கிறது. ஆனால் இப்படியொரு பெயரில் கிரீம்கள் கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. கடைகளில் கிடைக்கும் ரசாயன பாதிப்புகள் அதிகமுள்ள கிரீம்களை பயன்படுத்துவதாலும், பழைய மேக் அப் சாதனங்களை வைத்து கண்களில் மேக் அப் போடுவதாலும் கண்களில் எரிச்சல், அலர்ஜி உள்ளிட்ட பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. கண் இமைகள் குச்சி போல் நிற்க வேண்டும் என்பதற்காக கண் மேகளில் போடப்படும் மஸ்காராவால் கண்களில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சல் சிவந்து போய், கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெண்கள் தங்களின் கண்களில் போடப்படும் மேக் அப்களால், அவர்களின் கண்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. சில பேருக்கு கண் பார்வை மங்குகிறது. சிலருக்கோ நிரந்தரமாக கண்கள் பறிபோகும் அபாயமும் ஏற்படுகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கண்கள் கசக்குதல், கண் எரிச்சல், உறுத்தல், கண் சிவந்துபோதல், கண்ணைத் தேய்க்கத்தோன்றுதல் எல்லாம் மேக் அப் போடுதால் வரும் முக்கிய பிரச்சினைகள். இவை பெரிய பிரச்சினைகள் இல்லை என்றால் கூட இவற்றை வளரவிட்டால் பெரிய பிரச்சினையாக வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக கண்களில் ஏற்படும் அலர்ஜி.
பாக்டீரியா தொற்று:
கண் இமைகளில் மேக் அப் போடப்பயன்படுத்தப்படும் பிரஸ், சீக்கிரத்தில் பாக்டீரியாவால் பாதிக்கப்படும். இதனால் கண்களில் பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படும். இந்த பாக்டீரியா தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரியாததால் பிரஸ் வைத்துள்ள, மற்ற அழகு சாதனப் பொருட்களிலும் இந்த பாக்டீரியா பரவும். மற்ற அழகு சாதனங்களை பயன்படுத்தும் போது மற்ற இடங்களிலும் பாக்டீரியா தாக்குதல் ஏற்படுவதோடு, அலர்ஜியும் ஏற்படுகிறது.
பார்வை பாதிப்பு:
மேக் அப் போடும்போது கண்களில் படுவதால், கண்கள் சிவப்பாக மாறி விடுகிறது. கண்களுக்கு போடப்படும் மேக் அப் பென்சில்கள் அல்லது பிரஸ்களாஸ் பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது.
விலை குறைவான அழகு சாதனங்கள்:
பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கு தாங்களே மேக் அப் செய்து கொள்கிறார்கள். இதில் வல்லுனர்களின் அறிவுரையை கேட்பதில்லை. மேக் அப் பொருட்கள் வாங்கும் போதே எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் தரமான அழகு சாதன பொருட்களை தான் வாங்கி இருப்பதாக சொல்லி பலர் விளைவை அவர்களே தேடி கொள்கிறார்கள்.
மேக்கப்பை பகிர்ந்து கொள்வது:
அழகு சாதனப் பொருட்களை பலர் தங்கள் தோழிகளுடனோ, சகோதரிகளுடனோ பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரே வீட்டிற்கு எதற்கு விலை உயர்ந்த அழகு சாதனப்பொருட்கள் என்பது தான் பலரின் கேள்வி. ஆனால் ஒருவர் கண்களுக்கு மேக் அப் போட்டு விட்டு, அப்படியே மற்றவர் பயன்படுத்தும் போது, பாக்டீரியா பாதிப்பு அடுத்தவரின் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் கண்கள் மாறி விடுகிறது. இதன் காரணமாக கண்களில் எரிச்சல் அதிகரிக்கும்.கண்களுக்கு போடப்படும் மேக் அப்பால், கார்னியாவில் பாதிப்பு ஏற்படுகிறது. மஸ்காரா, ஐ லைனர் போடும்போது கார்னியாவில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கார்னியாவில் அதிகளவு பாதிப்பு ஏற்படும் போது, கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது.
கண்களில் தொற்று ஏற்படாமல் இருக்க என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,
- கண்களில் மேக் அப் சாதனங்கள் போடுவதால் கண்களில் வைரல் பாதிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்களில் வெள்ளையாக மாறுதல் போன்று உணர்ந்தால் உடனே கண் மருத்துவரை பார்க்க வேண்டும்.
- முகத்தில் பிளீச் செய்யும் போது கண்களுக்கு பிளீச் செய்கிறார்கள். பிளீச்சில் உள்ள ரசாயணம் கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுகிறது. இதனால் கண்களை எப்போதும் தேய்த்து கொண்டே இருக்க வேண்டிதாகிறது. இதன் காரணமாக கண்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதுடன், வீங்கவும் செய்து விடுகிறது. இதனால் பலர் தூங்க முடியாமல் அவதி படுகிறார்கள். கண்களில் மேக் அப் போடும் போது விழித்திரையில் படுவதால் கண் பார்வை பறி போகும் நிலையும் ஏற்படலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
- கண்களுக்கு மேக் அப் போட்டவுடன், எரிச்சல் ஏற்பட்டால் உடனே அந்த மேக் அப் சாதன பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
- கண்களுக்கு மேக் அப் போடும் போது, கைகளில் உள்ள பாக்டீரியா, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கைகளை கழுவிவிட்டு போடுவது தான் சிறந்தது.
- கண்களுக்கு பயன்படுத்தும் பிரஷ் சுத்தமாக தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- மேக் அப் சாதனங்களில் மண் அல்லது தூசி பரவாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் சுத்தம் செய்த பின் பயன்படுத்துங்கள்.
- வண்டியில் போகும் போது, மேக் அப் போடுவதை தவிர்த்து விடுங்கள். அவசரத்தில் போடுவதால் பாதிப்பையும் தேடி கொள்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
- இரவு தூங்குவதற்கு முன் மேக் அப்பை கலைத்து விட்டு தூங்க வேண்டும். பேபி சோப்பை பயன்படுத்தியோ, ரசாயன பாதிப்பு அதிகம் இல்லாத சோப்பையோ பயன்படுத்தி மேக் அப் நீக்க வேண்டும்.