இந்தியர்கள் தங்களது சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருட்கள் வெறும் வாசனை மற்றும் சுவைக்காக மட்டுமின்றி மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றது. அதனால் தான் இந்திய சமையல்களில் சாதாரண குருமாவில் தொடங்கி பிரியாணி வரை மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆண், பெண் இருவருக்கும் அருமருத்தாக இருக்கக்கூடிய இலவங்கபட்டை குறித்து விரிவாக பார்க்கலாம்…
மரத்தின் பெயரான சின்னாமாமம் என்பது காலப்போக்கி மருவி Cinnammon என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிக அளவில் வளரக்கூடிய மரமாக உள்ளது. இந்தோனேஷியாவில், ஜாவா மற்றும் சுமத்திராவில் இது பயிரிடப்படுகிறது. இலவங்கபட்டை மசாலா பொருளாக மட்டுமின்றி எண்ணெய்யாகவும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
இலவங்கப்பட்டையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: காசியா மற்றும் சிலோன். இரண்டுக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்து விவரங்கள் உள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள கலவைகள் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், புற்றுநோய் மற்றும் இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடும் என்று சில ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
ஒரு ஸ்பூன் பட்டையில் 6.42 கலோரிகள், 2.1 கிராம் கார்போஹைட்ரேட், 26.1 மில்லி கிராம் கால்சியம், 0.24 மில்லி கிராம் இரும்பு, 1.56 மில்லி கிராம் மக்னீசியம், 1.66 மில்லி கிராம் பாஸ்பரஸ், 11.2 மில்லி கிராம் பொட்டாசியம், 0.39 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ ஆகியன உள்ளன.
வைட்டமின்கள் பி மற்றும் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான கோலின், பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், பீட்டா-கிரிப்டோக்சாந்தின், லைகோபீன், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவையும் உள்ளன.
பெண்களுக்கு வரப்பிரசாதமான லவங்க பட்டை:
பெண்கள் தொடர்ந்து இலவங்கப்பட்டையை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மட்டுமல்லாமல், PCOD போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவில் இலவங்கப்பட்டையை எப்படி சேர்த்துக்கொள்ளலாம்.. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை இப்போது பார்க்கலாம்..
- மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இலவங்கப்பட்டை பயன்படுத்துவது வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பெண்கள் இலவங்கப்பட்டை தேநீர் அல்லது இலவங்கப்பட்டை தண்ணீர் எடுத்துக் கொள்ளவது வலிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே பிசிஓடி பிரச்சனை சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த பிரச்சனை ஹார்மோன்களுடன் தொடர்புடையது. இந்த பிரச்சனை ஏற்படும் போது பெண்களுக்கு மன அழுத்தத்துடன் மாதவிடாய் ஒழுங்கற்ற பிரச்சனையும் ஏற்படும். இதற்கும் இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- மெனோபாஸ் காரணமாக பெண்கள் அடிக்கடி எரிச்சல், டென்ஷன், தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் இலவங்கப்பட்டையை உட்கொள்வதும் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது.
ஆண்களுக்கு லவங்க பட்டை கொடுக்கும் பலன்கள்:
ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மலட்டு தன்மை, ஆண்மை குறைபாடு, விறைப்புத் தன்மை குறைபாடு போன்றவற்றிற்கு பட்டை நல்ல மருத்தாக விளங்குகிறது. இரவு தூங்கும் முன்பாக இலவங்கப் பட்டையை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம். மேலும் பட்டை பவுடரை சாலட், ஜூஸ், தயிர், காய்கறிகள் அல்லது சூப் ஆகியவற்றில் கலந்தும் சாப்பிடலாம்.
சீரான செரிமானம்:
இலவங்கப்பட்டையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றி, நாம் உண்ணும் உணவில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் செல்ல உதவுகிறது. அதனால் செரிமான அமைப்பு சுத்தமாகி, உணவு எளிதில் ஜீரணமாகும். இதன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
மேலும் இலவங்கபட்டை உடல் சூட்டை தணிப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது என ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகளைத் தருகிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்தால், உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இலவங்கப்பட்டையை நம் உணவில் சேர்த்துக்கொண்டால்.. உடலில் இன்சுலின் தாக்கம் அதிகரித்து.. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது மற்றும் உடல் எடை அதிகரிப்பதையும் குறைக்கிறது.
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு 40 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 கிராம் இலவங்கப்பட்டையை உட்கொண்டு வந்துள்ளனர். பரிசோதனை காலம் முடிந்த பிறகு அவர்களை பரிசோதித்த போது, குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள், குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் கொழுப்பு ஆகியவற்றின் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அல்சைமர் நோயைத் தடுக்கும்:

விலங்குகளிடம் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகளின் படி, இலவங்க பட்டை அல்சைமர் எனப்படும் நியாபக மறதி வியாதியை தடுக்க உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அல்சைமர் நோய்க்கான் மருந்து தயாரிக்கும் பணியில் இலவங்கை பட்டையை பயன்படுத்த நிபுணர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹெச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாப்பு:
இலவங்கப்பட்டை எச்.ஐ.வி-யிலிருந்து பாதுகாக்க உதவும் என்று கண்டறிந்தது. 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் இலவங்க பட்டையில் இருந்து எடுக்கப்படும் சாறு ஹெச்.ஐ.வி. நோயை எதிர்த்து போராடக்கூடியது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Cardamom Benefits : ஏலக்காய் சாப்பிடுவதால் தலை முதல் கால் வரை இத்தனை நன்மைகளா?
எனவே இலவங்கபட்டை அடங்கிய உணவினை ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கு கொடுப்பது அந்நோய்க்கான சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தை கண்டறிய உதவும் என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கும்:

இலவங்க பட்டையில் சின்னமால்டிஹைட்கள் ஆன்டிடூமர் மற்றும் ஆன்டிகான்சர் பண்புகள் உள்ளன. எனவே இலவங்கபட்டை மற்றும் ஏலக்காய் சாற்றை கேன்சரால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு செலுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதன் பின்னர் எலிகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் எலிகளின் மெலனோமா செல்களில் குறைந்த அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சோதனைகள் கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: Freepik