$
பருவமழை மகிழ்ச்சியை மட்டுமல்ல கூடவே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களையும் கொண்டு வருகிறது. இந்த பருவத்தில் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை உணவுகளால் ஏற்படுகிறது. அதனால்தான் சில உணவுகளை, குறிப்பாக இலை காய்கறிகளை உட்கொள்ள வேண்டாம் என்று பெரியவர்கள் அறிவுறுத்துவதை பார்த்திருப்போம்.
பல ஆய்வுகளின்படி, காற்றில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதத்தை கீரைகள் உறிஞ்சுகின்றன. இதனால் கீரைகள் பாக்டீரியா இனப்பெருக்க செய்ய சாதகமான இடமாக மாறுகிறது. குறிப்பாக சதுப்பு நிலங்களில், இலைகள் தண்ணீரில் மூழ்கியிருக்கும். இதில் பல்வேறு பாக்டீரியாக்கள் (எகோலி, சால்மோனெல்லா, சூடோமோனாஸ், சாந்தமெனாஸ்), பல பூஞ்சைகள் (ஆஸ்பெர்கிலஸ், கிளாடோஸ்போரியம்) உள்ளன.
மேலும் அத்தகைய கீரைகள் அல்லது இலை காய்கறிகளை சரியாக வேகவைக்காமல் உட்கொள்ளும் போது, வயிற்றுப்போக்கு, ஃபுட் பாயிஷன் மற்றும் குடல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், நிபுணர்களின் கருத்துப்படி, பருவமழைக் காலங்களில் கூட பச்சை இலை காய்கறிகளை உட்கொள்ளலாம், நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காது. மழைக்காலத்தில் இலை காய்கறிகளைச் சாப்பிடும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென பார்க்கலாம்…
மழைக்காலங்களில் பச்சை இலை காய்கறிகளில் தங்கக்கூடிய அதிகப்படியான பாக்டீரியாக்களை நீக்க அதனை சரியாக கழுவ வேண்டும்.
புதிய இலைகளைப் பிரித்தெடுக்கவும்:
நீங்கள் விரும்பிய இலை காய்கறிகள் அல்லது கீரைகளை வாங்கியவுடன், முதலில் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான இலைகளை அதிக ஈரமான மற்றும் மந்தமான இலைகளில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
சரியாக கழுவுவது எப்படி?
பலரும் கீரைகளைக் கழுவ கடைகளில் விற்பனை செய்யக்கூடிய சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் செயற்கையான கிளீனர்களைப் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பதிலாக, பச்சை இலை காய்கறிகளை ஓடும் நீரில் கழுவவும். ஒவ்வொரு இலைக்கும் நேரம் ஒதுக்கி, அவற்றை தனித்தனியாக கழுவுவதை உறுதி செய்யவும்.

இலைகளை உலர்த்தவும்:
இலை காய்கறிகளைக் கழுவிய பின்னர், அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, இலைகளை மின்விசிறியின் கீழ் உலர வைக்கவும். இலை கீரைகளை உலர வைக்க சாலட் ஸ்பின்னரையும் பயன்படுத்தலாம். உங்களிடம் சாலட் ஸ்பின்னர் இல்லையென்றால், காய்கறிகளை கிச்சன் டவலால் உலர வைக்கவும்.
ப்ளான்ச் செய்ய மறக்காதீர்கள்:
நீங்கள் பச்சையாகவோ அல்லது சமைத்தோ இலை காய்கறிகளை பயன்படுத்துவதாக இருந்தாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவற்றை ப்ளான்ச் செய்ய மறக்காதீர்கள். சிறிது உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். கீரையைச் சேர்த்து 30 வினாடிகள் ஊற விடவும். அவற்றை அதிக நேரம் வெந்நீரில் வைத்திருப்பது அவற்றின் நிறம் மற்றும் நறுமணத்தை பாதிக்கும்.
ஐஸ் பாத்:
வெந்நீரில் இருந்து இலை கீரைகளை எடுத்து ஐஸ் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மாற்றவும். ஒரு நிமிடம் வைத்திருந்து அகற்றவும். இது கீரையின் நிறம் மற்றும் வடிவத்தை அப்படியே வைத்திருக்க உதவும்.
Image Source: Freepik