கோடை வெப்பம் காரணமாக வியர்க்குரு ஏற்படுவது சகஜம். ஆனால், இது அதிகரித்தால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. வியர்க்குருவை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம். இவை உங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.
மஞ்சள், அறுகம்புல்
மஞ்சள் மற்றும் அறுகம் புல் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின் அதனை உடலில் தேய்த்து குளித்து வர வியர்க்குரு நீங்கும்.
நெல்லிக்காய் பொடி
சிறிதளவு நெல்லிக்காய் உடன், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்து நன்கு பொடியாக்கி, அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின், அதை ஆற விட்டு குடித்து வர வெப்பத்தால் வியர்க்குரு குறையும்.
மூலிகை பானங்கள்
இளநீர், கருப்புச்சாறு, வெள்ளரிக்காய் சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை குடிப்பதால் உடல் சூடு குறையும். மேலும், உடலின் நீரிழப்பு சரி செய்யப்படுகிறது. இதனால், வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
பனம் நுங்கு
கோடை காலத்தில் கிடைக்கும் பனம் நுங்கு, உடல் உஷ்ணம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுதும். எனவே, வெயில் காலத்தில் வியர்க்குருவை குறைக்க பனம் நுங்கு சாப்பிடலாம்.
சந்தனம்
வியர்க்குரு உட்பட, வெப்பத்தால் ஏற்படும் பல வகை சரும நோய்களுக்கு சந்தனம் ஒரு சிறந்த தீர்வு. இதில், உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, வியர்க்குரு பரவலை தடுக்கிறது.
கடலை மாவு
கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பயறினை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து பொடியாக அரைத்து, குளிக்கும் போது பயன்படுத்தி வர வியர்க்குரு குறையும்.
வேப்பிலை கூல்
வேப்பிலையுடன், சிறிதளவு மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து அரைக்க கிடைக்கும் கலவையினை உடலில் தேய்த்து குளித்து வர வெப்பத்தால் ஏற்படும் தடிப்புகள், சொறி மற்றும் வியர்குரு குறையும்.
கற்றாழை
சருமம் தொடர்பான நோய்களுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வு ஆகும். கற்றாழையின் ஜெல்லை, குளியல் சோப்புக்கு மாற்றாய் தினம் பயன்படுத்தி குளித்து வர வியர்க்குரு நீங்கும்.