ஈஸி ஸ்நாக்ஸ் ரெசிபி... டோஸ்டடு பன்னீர் சான்விச் செய்முறை!

By Devaki Jeganathan
22 May 2025, 17:25 IST

விறுவிறுப்பான காலத்தில், நாம்மில் பலருக்கு சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், டோஸ்டடு பன்னீர் சான்விச் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி சட்னி செய்ய - கொத்தமல்லி இலை – ஒரு கட்டு, புதினா இலை – சிறிதளவு, துருவிய தேங்காய் –1/2 கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி (நறுக்கியது) – 1 மேசைக்கரண்டி, பூண்டு – 5 பற்கள், எலுமிச்சை சாறு – 1 எலுமிச்சையின் சாறு, சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி, உப்பு – 1/2 தேக்கரண்டி, தண்ணீர் – தேவையான அளவு.

பன்னீர் மாரினேட் செய்து வறுக்க

பன்னீர் – 400 கிராம், சீரகத் தூள் – 2 தேக்கரண்டி, மல்லி தூள் – 2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் – 1தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, உப்பு – 1 தேக்கரண்டி, நெய் – 20 கிராம்.

சான்விச் செய்ய

பிரெட் – 8, வெண்ணெய் – 100 கிராம், நெய் – 30 கிராம், யம் யம் சாஸ் செய்ய - மேயோனெய்ஸ் – 1 கப், தக்காளி சாஸ் – 2 மேசைக்கரண்டி, ஆப்பிள் சைடர் வினிகர் – 2 மேசைக்கரண்டி, சர்க்கரை – 1 மேசைக்கரண்டி, பாப்ரிகா தூள் – 1 மேசைக்கரண்டி, பூண்டு தூள் – 1 மேசைக்கரண்டி, உப்பு – 1 செய்ய, மிளகு தூள் –1/2 தேக்கரண்டி, தண்ணீர் – தேவையான அளவு

பன்னீரை ஊறவைக்க

பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சீரகத் தூள், மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை பன்னீர் துண்டுகளின் மீது பூசி, பன்னீர் துண்டுகளை 10 நிமிடங்கள் அந்த மசாலாவுடன் ஊற விடவும்.

கொத்தமல்லி சட்னி தயார் செய்ய

மிக்ஸர் ஜாரில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். சீரகத் தூள், சாட் மசாலா தூள் சேர்க்கவும். உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்க்கவும். பேஸ்ட் ஆக அரைக்கவும். துருவிய தேங்காயையும் சேர்த்து மீண்டும் அரைக்கவும். கொத்தமல்லி சட்னி தயார்.

யம் யம் சாஸ் தயார் செய்ய

ஒரு பாத்திரத்தில் மேயோனெய்ஸ், தக்காளி சாஸ், ஆப்பிள் சைடர் வினிகர், சர்க்கரை, பாப்ரிகா தூள், பூண்டு தூள், உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். யம் யம் சாஸ் தயார்.

பன்னீர் வறுக்க

ஒரு தவாவில் சிறிது நெய் ஊற்றவும். நெய் சூடானதும் பன்னீர் துண்டுகளை மெதுவாக வைக்கவும். ஒவ்வொரு பக்கத்தையும் 30 விநாடிகள் வறுக்கவும். இரண்டு பக்கமும் வறுக்கப்பட்டதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

சான்விச் செய்ய

இரண்டு பிரெட் துண்டுகளை எடுக்கவும். வெண்ணெயை இரு துண்டுகளிலும் தடவவும். கொத்தமல்லி சட்னியை இரு துண்டுகளிலும் பரப்பவும். ஒரு துண்டின் மேல் வறுத்த பன்னீர் துண்டுகளை வைக்கவும். மற்றொரு துண்டை மேலே வைத்து மூடவும்.

சான்விச் ரோஸ்ட் செய்ய

ஒரு தவாவில் சிறிது நெய் ஊற்றி, சான்விச்சை மெதுவாக வைக்கவும். மிதமான தீயில் வறுக்கவும். மேலே சிறிது நெய் தடவி, சான்விச்சை திருப்பவும். இன்னும் 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த பன்னீர் சான்விச் தயார். வறுத்த பன்னீர் சான்விச்சை வெட்டி, மேயோ மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.