நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வெப்பநிலையினை தாக்கு பிடிக்க உடலுக்கு தேவையான நீர் அவசியம். நம்மில் பலருக்கு வெயில் காலத்தில் அடிக்கடி ஜில்லென ஏதாவது குடிக்க தோன்றும். உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் – அரை லிட்டர், பாதாம் பிசின் – 5 துண்டுகள், பாதாம் பருப்பு – 15, சர்க்கரை – 10 ஸ்பூன், ஆப்பிள் – 1, ஸ்ட்ராபெரி – 4, ஏலக்காய் – 3.
செய்முறை படி - 1
இதற்கு முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கோப்பையில் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, சர்பத் அவ்வளவு நன்றாக இருக்கும்.
செய்முறை படி - 2
சர்பத் செய்ய, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக காய வைக்கவும். மற்றொரு அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கோப்பை தண்ணீரை சூடு செய்யவும்.
செய்முறை படி - 3
சிறய பாத்திரத்தில் வைத்த தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து, அதில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். 10 நிமிடங்களுக்கு பின் பருப்பினை தனியே எடுத்து தோல் நீக்கவும்.
செய்முறை படி - 4
தோல் நீக்கிய பாதாம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைத்த பாதாம் பருப்பு சற்று திப்பை திப்பையாக இருக்க வேண்டும்.
செய்முறை படி - 5
பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, பாலில் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பின்னர், இந்த பால் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் 30 நிமிடங்களுக்கு வைத்து குளிரூட்டவும்.
பாதாம் பால் சர்பத் ரெடி
இப்போது, ஒரு கோப்பையில் ஊற வைத்த பாதாம் பிசின், குளிரூட்டப்பட்ட பால் மற்றும் அரைத்து எடுக்கப்பட்ட பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி எடுக்க பாதாம் பால் சர்பத் ரெடி!