மாம்பழ சீசன் வந்தாச்சி… மாம்பழம் என்றாலே நம்மில் பலரது வாயில் எச்சில் ஊரும். எப்பவும் ஒரே மாதரி மாம்பழம் சாப்பிட்டு சலிப்பாக இருந்தால் இந்த முறை மாம்பழ கஸ்டர்டு சர்பத் செய்து சாப்பிடுங்க. சுவை அட்டகாசமாக இருக்கும். செய்முறை இங்கே_
தேவையான பொருட்கள்:
அல்போன்சா மாம்பழம் - 2, முழுகொழுப்புள்ள பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 கப், வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் - 2.1/2 மேசைக்கரண்டி, சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி, சேமியா - 1/2 கப், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ்.
செய்முறை படி - 1
முதலில் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ், 3 டீ கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு டப்பாவில் ஊற்றவும். சுமார் 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
செய்முறை படி - 2
மாம்பழத்தின் தோலை உரித்து, பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை தனியே வைக்கவும். பின், ஒரு சாஸ் பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, பால் சூடானதும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
செய்முறை படி - 3
பின், ஒரு கிண்ணத்தில் கஸ்டர்டு பவுடரை பாலுடன் கலக்கவும். இந்த கஸ்டர்டு பாலை அடுப்பில் கொதிக்கும் பாலுடன் கலக்கவும். தீயை மிதமாக வைத்து, பாலை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடைவெளியில் கிளறிக்கொண்டே இருங்கள்.
செய்முறை படி - 4
கஸ்டர்டு வெந்தவுடன், மாம்பழ கூழ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை 2 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைத்து அடுப்பை அணைக்கவும். பின், கலவையை முழுவதுமாக ஆறவைத்து, பின்னர் 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
செய்முறை படி - 5
சப்ஜா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஜெல்லியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேமியாவை சேர்க்கவும். அது முழுமையாக வேகும் வரை சமைக்கவும், பின் அதை வடிகட்டவும்.
செய்முறை படி - 6
மாம்பழ கஸ்டர்டை பரிமாற, முதலில் சமைத்த சேமியாவை பரிமாறும் கிளாஸில் வைக்கவும். அதன் மேல், சிறிது ஊறவைத்த சப்ஜா விதைகளைச் சேர்க்கவும். இப்போது ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி சேர்த்து, இறுதியாக மாம்பழ கஸ்டர்டை ஊற்றவும்.
செய்முறை படி - 7
இறுதியாக நறுக்கிய கொட்டைகள் மற்றும் நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் மாம்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இப்போது சுவையான மாம்பழ கஸ்டர்டு சர்பத் தயார்!