தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
உளவியல் ஆய்வுப்படி, மாணவர்கள் தனியாக படிப்பதை விட குழுவாக சேர்ந்து படிக்கும் பொது மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். குழுவாக படிக்கையில், அவர்கள் தங்களின் நண்பர்களுடன் போட்டி போடுகிறார்கள். எனவே, மாணவர்கள் தங்களின் நண்பர்களை சந்திக்கவோ அல்லது நண்பர்களை தங்களின் வீட்டிற்கு அழைக்கவோ பெற்றோர்கள் அனுமதி வழங்க வேண்டும்.
தேர்வு அட்டவணையின் படி, ஒரு பாடத்தை எவ்வளவு நாள் அல்லது நேரம் படிக்க வேண்டும் என திட்டமிடவும். இதனால், தேர்வுக்கு முன் அனைத்து பாடங்களை படிக்க நேரம் கிடைக்கும்.
கேள்விக்கான பதிலை நினைவில் வைத்துக்கொள்ள சிறிய குறிப்புகளை தயார் செய்யவும். இது கடைசி நேர திருப்புதலுக்கு உதவியாக இருக்கும். பாடத்தில் வரும் விஷயங்களை உங்களுக்கு பிடித்த படத்துடன் தொடர்பு படுத்தி நினைவில் வைக்கவும்.
படிக்கும் பாடத்தை எப்போதும் மனப்பாடம் செய்யாதீர்கள். பாடத்தை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து புரிந்துக்கொண்டு பின், எழுதி பார்த்தல் பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற உதவியாக இருக்கும்.
நீங்கள் படிக்கும் போது, உங்களை சுற்றி தேவையற்ற சப்தங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். படிக்கையில் உங்களை சுற்றி தேவையற்ற சப்தங்கள் இருந்தால், உங்கள் கவனம் சிதறும். எனவே, வீட்டில் அமைதியான சூழல் நிலவ பெற்றோர் உதவ வேண்டும்.
தேர்வு நேரத்தை சரியாக பயன்படுத்த உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். யோசித்து பதில் எழுதும் படி இருக்கும் கேள்விகளுக்கான பதிலை கடைசியாக எழுதுங்கள்.
தேர்வின் போது குறைந்த மதிப்பெண் கொண்ட கேள்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அந்த வகையில், 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள் அனைத்திற்கு சரியான பதில் அளிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
தேர்வுக்கு முன் நாம் தயாராகுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல ஓய்வு எடுப்பதும் அவசியம். ஓய்வு உங்கள் ஆரோக்கியம், மூளை மற்றும் மனதை அமைதியாக வைக்கும். இதனால் படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாக பதியும்.
தேர்வு அறைக்கு செல்லும் முன் நண்பர்களுடன், தேர்வு பற்றியோ அல்லது வினாக்கள் பற்றியோ விவாதம் செய்ய வேண்டாம். இது மனக்குழப்பத்துக்கு வழிவகுக்கும். எனவே, அமைதியாக நீங்கள் படித்ததை நினைவு படுத்தவும்.